Sunday, May 31, 2020
நீங்கள் எதிர்கொள்ளும் கடினமான தருணங்களைக் கையாள்வது எப்படி?
ஒரு மனிதனை மகிழ்ச்சி, கவலை, கோபம், பயம், திகைப்பு மற்றும் மன அழுத்தம் போன்ற பல உணர்ச்சிகள் ஆட்கொள்கின்றன. அதன்போது அவன் நிலைகுலைந்து தனது சிந்தனைகளை பயன்படுத்த மறந்து போகின்றான். அவசரமான, தவறான முடிவுகளை எடுக்கின்றான். அந்த முடிவுகள் அவனை மேலும் நிலைகுலையச் செய்கின்றன. உணர்ச்சி வயப்படுதல் எப்போதும், அப்போதான சிந்தனை ஆற்றலைக் குறைக்கிறது. இது போன்ற சங்கடங்கள் நிறைந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நாம் சற்று சிந்தித்து முடிவுகளை எடுத்தாலும் அது நமது வாழ்வை பலமடங்கு செழுமையாக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.
#மனதை முறையாகக் கையாளத் தெரிந்தவன் அனைத்தையும் முறையாகக் கையாளத் தெரிந்தவன் ஆகின்றான். இதைப் பலர் அறிந்திருந்தாலும் பலருடைய சந்தேகம், தமது மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது எவ்வாறு? என்பது தான். #மனம் ஒரு மாய மந்திரக் கட்டு. ஆழ்ந்து நோக்கினால் அதன் செயற்பாடுகள் யாவும் புதிராகவே இருக்கும். ஆனால் ஒன்றை நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். ”விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முழைக்கும்” என்பர். அது மனதின் விடயத்தில் மிக மிக உண்மையானது. #”எது எடுத்துக் கொண்டாயோ அது இங்கேயே எடுத்துக் கொள்ளப்பட்டது” என்று கீதையில் கண்ணன் கூறியுள்ளான். நீங்கள் நல்லனவற்றை மட்டும் மனதிற்கு உள்வாங்கிக் கொண்டால் நல்லன மட்டுமே விளைவதாகின்றது.
மனதைச் செம்மைப்படுத்தி வாழ்க்கையைச் செம்மைப்படுத்த முயல்வது ஒன்று புதிய விடயமல்ல. அதற்காகப் பல முயற்சிகளை ஆதிகாலம் தொட்டு மனிதன் செய்துகொண்டே வந்துள்ளான். ஆன்மீகமும் அவற்றில் ஒன்று ஆகும்.
”பொழுதுகள் புலர்வது எனக்காக (உனக்காக)
சூரியன் உதிப்பது எனக்காக (உனக்காக)
பொழுதுகள் மறைவதும் எனக்காக (உனக்காக)
சந்திரன் வருவதும் எனக்காக (உனக்காக)
எல்லாம் இன்னமும் என் (உன்) கட்டுப்பாட்டிலேயே உண்டு
எதுவும் கை நழுவிப் போய்விடவில்லை.”
இது போன்ற போற்றல் பாடல்கள், இறை துதிகள் மனதைத் தளர்ந்து போக விடாது நமது பிடியிலேயே வைத்திருக்கப்பதற்காக எழுதப்படுபவை. அவை மனதை உளவியல் ரீதியாகத் திருப்திப் படுத்துகின்றன. இவ்வாறுதான் ஆதி காலத்தில் இறைவனின் தோற்றம் நிகழ்ந்தது. நமக்கு வாழ்க்கையில் பிடிப்பு எதுவும் இல்லாது போகும்போது நமது மனதைத் தொலைக்காமல் பாதுகாக்க அது உதவியாக அமைந்தது. கடவுள் என்பது சிலருடைய ஞானம்; பிறருடைய நன்மைக்காகப் பயன்பட்டது.
குறிப்பு: இப்பாடல் நானே எழுதியது.
(Psychologically satisfies your mind. This is how the god evolves. God was the wisdom of someone for some others needs.)
நாம் நமது மன வலிமையை இழக்கும்போது அடுத்தவர்கள் சிந்தனைக்குக் கீழ்ப்பட்டவர்கள் ஆகின்றோம். #விதியையும் மதியால் வெல்லலாம் என்பர். நமது மனம் நம்மை சூழ உள்ள சமூகம் உட்பட வெகு தொலைவில் கிரகங்கள், உடுக்களிற்கும் கட்டுப்பட்டதாகவே இருக்கின்றது. இது பற்றி முன்னதொரு பதிவில் பார்த்திருந்தோம். #நாம் சுயமாக எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும்தான் இயற்கையையும் நமக்குச் சார்பாக மாற்றிப் போட வல்லது. நமது விதியையும் மாற்ற வல்லது. அது இந்த சூழலில் நமக்குச் சார்பான ஒரு விதையை விதைக்கின்றது. ஒரு நண்பன் ஒரு ஆராய்ச்சி குறித்துக் கூறிய கதை இங்கே கூறுவதற்குரியது.
ஒரு காட்டில் இரண்டு பிரிப்புக்கள் இருந்தன. இரண்டும் வேலிகளால் பிரிக்கப்பட்டது போல எந்தத் தொடர்புமே கிடையாது. இரண்டிலும் தாராளமாகக் குரங்குகள் வாழ்ந்து வந்தன. அதிலே ஒரு காட்டிலே இருக்கும் குரங்குகளுக்குச் சில பழக்கவழக்கங்கள் சொல்லித் தரப்பட்டன. சிறிது காலத்தின் பின்பு அயல் காட்டிலுள்ள குரங்குகளும் அந்தப் பழக்கவழக்கங்களைக் கொண்டனவாக இருந்தனவாம். இது எண்ண அலைகள் எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும் கூடப் பரவும் என்பதைக் காட்டுகிறது. நீங்கள் உங்கள் எண்ணங்களில் உறுதியாக இல்லாவிடில் இரண்டாம் குரங்குளைப் போல ஏனையோரின் சிந்தனைகளினால் பாதிக்கபட்டு அதன்படியே நடத்தல் ஆவீர்கள்.
மனம் என்பது நாம் மட்டும் சம்பத்தப்பட்ட விடயமல்ல. அது சூழலினாலும் தாக்கத்திற்கு உள்ளாகின்றது. அதிலிருந்து மீண்டு உங்களை, உங்கள் மனதை நிலையாக வைத்திருப்பது எவ்வாறு? #உங்களது தற்போதைய மூச்சு உங்களது அடுத்தபோதினது மனநிலையைத் தீர்மானிக்கிறது. எனவே நீங்கள் கடினமான போதுகளைச் சந்திக்கும் போதெல்லாம் உங்கள் மூச்சின் மீது கவனம் செலுத்தி அதனை நிலையாக வைத்திருக்க முயலுங்கள். ஓரிரு நொடிகளில் உங்கள் மூச்சு சீராகும்; மனமும் சாந்தம் அடைதுவிடும். பிறகு உங்கள் மனம் சிந்தித்து செயலாற்ற ஆரம்பித்துவிடும்.
#Your current breath decides your next state of mind.
Tuesday, May 26, 2020
அச்சம் என்பது மடைமையடா! அச்சம், பணிவு வேறுபாடு. இரண்டும் ஒருங்கே இருக்கலாமா?
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்."
-பாரதி பாடைலில் ஒரு சிறு பகுதி-
ஏன் பாரதி சிறுவயதில் இருந்தே அஞ்சாமை பழக வேண்டும் என்றார். அதற்காக நான் ஒரு கதை சொல்கிறேன், நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
ஒரு கொடிய மிருகங்கள் வாழும் அடர்ந்த காடு. அதனிலிருந்து சற்றுத் தொலைவில் கிராமத்தை ஒட்டி ஒரு வீடு. அங்கே ஒரு வேடன் வசித்து வந்தான். ஒருநாள், ஒரு சிறுவன் அவ்வேடன் வீட்டுக்குச் சென்றான். அங்கே, ஒரு நாயும் ஒரு புலியும் இருந்தன. அவன் புலியைக் கண்டவுடன் பயந்து விட்டான். அது உறுமிக் கொண்டு இருந்தது. அப்போது, அந்த வேடன் ஒரு குச்சியுடன் வெளியே வந்தான். இரண்டும் இரு மூலைகளில் போய் அடங்கிப் போயின. அதனைக் கண்டு வியந்த சிறுவன், அது எவ்வாறு என்று கேட்டான். அதற்கு அவ் வேடன் பின்வருமாறு கூறினான்.
ஒரு நாள், நான் காட்டிற்குச் சென்றேன். அப்போது, இந்தப் புலிக் குட்டியைக் கண்டேன். அதனை அழைத்து வரும் வழியில் ஒரு நாய்க் குட்டியும் இருந்தது. அதையும் அழைத்து வந்தேன். தினமும் அதற்கு இந்தத் தடியால் ஒரு அடி போடுவேன். அப்போது அவை பயந்து மூலைகளில் போய் ஒதுங்கும். அதன் பிறகு தான் இரை போடுவேன் என்றான். இப்போது அவை இந்தக் குச்சியைக் கண்டால் பயந்து மூலையில் போய் ஒதுங்கிக் கொள்கின்றன. தன்னுடைய பலத்தையே புலி மறந்து விட்டது. அதன் மரபணுவின் தன்மையும் தோற்றுப் போனது. என்றான்.
பார்த்தீர்களா! காட்டில் வேட்டையாடும் புலிகூட அச்சப்படக் கற்றுக் கொண்டால் பயந்து நடுங்க வேண்டி இருக்கிறது. இந்த வாழ்க்கையில் நாம் நம்மையும் ஒரு விலங்கு என ஒத்துக் கொண்டால் அனைத்து சூட்சுமமும் விளங்கிவிடும். ஆனால், எமக்கு சற்று அதிக ஆயுள் காலமும், சிந்திக்கும் ஆற்றலும், இயைபாக்கம் அடைந்த உடலும் இருக்கிறது. உயிரினங்களின் மூளை யாவற்றையும் இந்த ஞாலத்திலிருந்தே கற்றுக் கொள்கின்றன.
பிறகு, காட்டில் சிங்கம், புலிக்கு வேட்டையாடக் கற்றுக் கொடுத்தது யார் என்ற கேள்வி எழுகிறது. இவை, அதன் மரபணுக்களில் பொதிந்த அவற்றின் உடலில் தன்மை. அதற்குப் பசிக்கிறது. அதற்கு வேட்டையாட முடிவதால் வேட்டையாடி உண்கிறது. அதன் நாக்கிற்கு ஊண் உண்ணப் பிடித்திருக்கிறது. அவ்வளவும் தான். (ஒரு வேளை 7 ஆம் அறிவில் சுரியா கூறியது போல ஏதாவது பரம்பரை வழியான அறிவுப் பரிமாற்றம் இருக்கிறதோ தெரியவில்லை). இவற்றில் சூழல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
விலங்குகள் யாவுமே செயல் விளைவுகள் மூலமாகவே அனுபவ அறிவைப் பெறுகிறது. அதாவது, தான் செய்யும் செயலின் விளைவை ஒப்பீடாக நினைவில் வைத்துக் கொண்டு தான் ஞானம் பெறுகிறது. சொல்லித் தந்து நாம் பெறும் கல்வி இவற்றுள் அடங்காது. ஆனால், நிச்சயமாக அதன் ஆரம்பமாங்களான கேட்டல், சொல்லல், எழுதுதல் போன்ற மொழிக் கற்கைககள் இதன் பாற்பட்டவையே. ஆரம்பத்தில் ஒரு குழந்தையானது, நிலாவினைக் காட்டி அது நிலா எனச் சொல்லும்போது அது நிலா என்பதையும் அதன் உச்சரிப்பு அதுதான் என்பதையும் ஒப்பிட்டு நினைவில் கொள்கிறது. இங்கே அந்த ஓசையும் வலி போல ஒரு உணர்ச்சியே. அதை அது நினைவில் கொள்கிறது. (குறிப்பு: அப்போது அது வேறு எந்த வலியையும் கண்டதில்லை).
இப்போது அந்த புலி ஏன் நடுங்கி மூலையில் பதுங்கியது என்று புரிகிறதா! அது தானே நினைத்தாலும் எளிதில் அந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள இயலாது. அது அதன் உடல் எங்கும் வியாபித்துவிட்டது. அது பயம் கொள்ள மறுத்தாலும் குச்சியைப் பார்த்தால் தானாக அதன் இதயம் துடிக்கும், இரத்தம் உறையும். அச்சம் என்பது வெறுமனே மனதுடன் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. உடல் காணும் அனுபவ ஞானம் சம்பந்தப்பட்டது. இதனால் தான் பாரதி குழந்தைகளுக்கு இளம்பருவம் முதற்கொண்டே பயம் கொள்ளப் பழக்க வேண்டாம் என்கிறார்.
பலமான யானை உண்டு. வேகமான சிறுத்தை உண்டு. கொடிய விசப் பாம்புகள் உண்டு. சிங்கம் மட்டும் எப்படிக் காட்டுக்கு ராஜா ஆனது. அதன் மனப்பாங்கினால் தான் அது அவ்வாறு ஆனது. அது தன்னை ராஜாவாக நினைக்கிறது. அது போலவே வாழ்கிறது. வேறு எதனையும் அது கண்டு அஞ்சுவதே கிடையாது; ஏன் கருத்தில் கொள்வதே கிடையாது. ஏனையவை அதற்கு ஆசைப்படவும் இல்லை. அவ்வாறு வாழவும் இல்லை. அது காட்டிலே இயற்கை கற்றுத் தரும் தனிமையான சூழல். ஆனால் மனிதனோ சமூகத்தில் ஒன்றித்து வாழ்பபவன். இந்தச் சூழல் அவனுக்குப் பல வலிகளைக் கொடுத்து பலவாறு அவனை மாற்ற முற்படுகிறது. ஆனால், ஒருவன், தன்னை, தன் குணத்தினை தான் தான் முடிவு செய்ய வேண்டும். அவனே அது போல தன்னைச் செதுக்கியாக வேண்டும்.
பிறகு, பயபக்தி, பணிவு என்பவை பற்றி பல ஒழுக்கங்களை வள்ளுவர், ஔவையார் உட்படப் பலர் கூறி இருக்கின்றனரே. அவை என் கூற்றுக்கு முரணாகின்றனவே! உண்மையில் பணிவு அவசியம் தானா? அவ்வாறெனில், இரண்டையும் ஒருங்கே கடைப்பிடிப்பது எப்படி?
பணிவு ஒரு மனிதனைத் தவறான பாதையில் செல்லாது வாழ உதவுகிறது. நாம் சமூகத்திடையே பல உறவு முறைகள் வைத்து வாழ்கிறோம். ஒவ்வொரு உறவுகளும் வெவ்வேறு வகையானவை. அவற்றில் பல கடன்கள், கடமைகள், தேவைகள் நிறைந்தவை. சில உறவுகள் உரிமைகளும் உடையவை. நாம் அந்தக் கடமைகள் நிறைந்த உறவுகளுக்கு எப்போதும் பணிவாக நடக்க வேண்டும். அது நன்றியின் நிமித்தமாகவும் இருக்கலாம். அல்லது அவர்களின் தேவைகள் பல இன்னமும் எமக்கு இருக்கலாம். அவர்களின் மனப்பூர்வமாக நாம் அவற்றை அடைந்து முன்னேற வேண்டும் எனில் நாம் நிச்சயமாகப் பணிவாக இருக்க வேண்டும். வாலாட்டும் நாயிற்குத்தான் அதிக உணவு அளிக்கப்படுகிறது.
இவை மட்டும் பணிவின் பயனல்ல. நீங்கள் எவ்வளவு உயர்ந்தாலும் வெளியே பணிவாக நடந்து கொள்வது உங்களை மேலும் உயர்த்துவதோடு, உங்களுக்கு அது கவசமாகவும் அமையும். இவை தவிர நேரடியாக நீஙகள் அனுபவிக்கும் நன்மைகள் பல உண்டு. "பொறுத்தார் பூமியாழ்வார்! பொங்கினார் காடாள்வார்!" என்பர். பொறுமையாக இருப்பவர்களுக்கு மனம் எப்போதும் அமைதியாக இருக்கும். அவர்களால், எந்த விடயத்திலும் இலகுவில் மனதை ஒருமுகப் படுத்த முடியும். ஆதலால், இலகுவில் விடயங்களைக் கற்கவும் முடியும். இதனால் அவர்கள் செயல்கள் சிறப்பாக அமைய, அவர்கள் வெற்றியடைவது இலகுவாகிறது. அதோடு, அவர்களின் உடலும் இதனால் அரோக்கியமாக இருக்கும். ஆனால், எந்நேரமும் கொந்தளிப்பாக இருப்பவர்கள். மனம் அலை பாய்கிறது. இதனால் உடலில் நாடி நாள ஓட்டங்கள் தாறு மாறாக அமைகிறது. இது அவர்களின் அந்தக் கொந்தளிப்பான எண்ணங்களின் விளைவே. அவர்களின் எண்ணத்தை வெற்றியடையச் செய்யவே அவ்வாறு நிகழ்கிறது. ஆனால், இது அவர்களுக்குள் இருந்து அவர்களையே அழித்துவிடுகிறது.
எந்த ஒரு உணர்ச்சியும் முதலில் மூளையையே சென்றடைகின்றது. பின்னர், அதற்கான மூளையின் எதிர்ச்செயலின் அடிப்படையிலேயே உடலில் அனைத்து மாற்றங்களுமே நிகழ்கின்றன. இவற்றில் சிலவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியாது. உதாரணமாக திடுக்கிடும் ஓசை ஒன்று கேட்டால் உடலில் அதிரினலின் சுரக்கிறது; உடலில் திடிரென்று சக்தி பெருகி உங்களைப் பதற்ற நிலைக்கு உள்ளாக்குகிறது. இப்போது நீங்கள் அந்த மேலதிக சக்தியை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். இதன்போது உங்கள் சுவாசம் மூலமும் இதன் விளைவைக் குறைதுக்கொள்ள இயலும். ”மேலதிக சக்தி உங்களை அமைதியாகக் கொல்லும்”. இதிலிருந்து விலகியே இருக்க வேண்டும். தினமும் உடல்பயிற்சி செய்ய வேண்டும். "Fly or fight mechanism" பற்றிப் படித்து இதனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.
இதிலிருந்து நான் என்ன சொல்ல வருகிறேன். அச்சமின்றி வேண்டுமா அல்லது பணிவு வேண்டுமா? நிச்சயம் இரண்டும் வேண்டும். ஆனால், எப்படி? நீங்கள் பயம் கொள்வது போலே நடித்துக் கொள்ளலாம். ஆனால் உண்மையில் பயம் என்ற ஒன்றை உங்கள் மனம் அனுபவிக்கக் கூடாது. நிச்சயம் அச்சமூட்டக் கூடிய செயல்கள் உங்கள் உடலில் பல அதிர்வுகளையும் மாற்றங்களையும் கொண்டு வந்து உங்களை நிலைகுலையச் செய்யும். நீங்கள் அவற்றிற்கு இசைவாக நடந்து அவற்றைக் குறைக்க வேண்டும். இதயம் துடிப்பது நல்லதுதான். அதனை அப்படியே விடுங்கள். ஆனால், ஆத்மார்த்தமாகப் பயம் கொண்டு பழகக் கூடாது. இவ்வாறே நாம் பெரியவர்களுக்கு வேண்டிய மரியாதையை வழங்க வேண்டும். ஆனால், ஒருபோதும் ஒழுக்கத்தைக் கைவிடக் கூடாது.
”துணிவுடமை” என்பது அஞ்சாமையின் இன்னொரு பொருள்தான். ஆனால் அது பற்றி நான் இங்கு அதிகம் பேசவில்லை. அது பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.
"பழக்கம் தான் பெரிது" என்று முன்னோர்கள் சொல்வர். அதில் எத்தனை உண்மை உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Thursday, May 21, 2020
நம் மனதில் நவக்கிரகங்களின் ஆதிக்கமும் அவற்றில் இருந்து விடுவிக்கும் மந்திர ஜெபமும்
நான் இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். கடந்த வருடங்களில் ஒரு தேதியில் நீங்கள் செய்த அல்லது நினைத்த விடயங்கள் அதே தேதியில் இந்த வருடம் ஞாபகம் வந்ததுண்டா? இது போலே எனக்குப் பல அனுபவங்கள் உண்டு.
நான் முகப் புத்தகத்தில் ஏதாவது ஒரு விடயத்தை முன்னைய வருடங்களில் பதிவிட்டு இருப்பேன். அதே திகதியில் எனக்கு அது தொடர்பான சிந்தனைகள் வரும். பிறகு நான் முகப் புத்தகத்தைத் திறந்தால் "நினைவுகள்" பகுதியில் அவை காட்டப்பட்டு இருக்கும். இது போல எனக்குப் பல தடவை நடந்ததுண்டு.
ஏன் இப்படி நிகழ்கின்றது என்று நோக்கினால், அதே திகதியில் சூரியன், பூமி அதே நிலைக்கு வருகிறது. ஆகையால், அதே போன்ற சூழல் உண்டாகிறது. அப்போது அதற்குரிய மூளையின் பகுதி தூண்டப்படுகிறது; அவை ஞாபகம் வருகின்றன்.
இது போல இன்னொரு விடயமும் உண்டு. அது ஒரு விடயத்தை நினைத்துவிட்டு மறந்து விட்டோம் எனில் மீண்டும் எங்கு எப்படி இருந்து யோசனை செய்தோமோ அங்கே சென்று அவ்வாறு இருந்து யோசனை செய்யின் அது ஞாபகம் வந்துவிடும்.
இதற்காகத்தான் படுத்துக் கொண்டு படிக்கக் கூடாது என்பர். உண்மையில் இதன் ஆதிக்கம் குறைவு தான் ஆனாலும் புறக்கணிக்க முடியாது. அதோடு நாம் பரீட்சை மண்டபத்தில் இருந்து எழுதும் மேசையின் ஒத்த ஒரு மேசையில் இருந்து எழுதிப் படித்து வந்தால் அது பல வகையில் கை கொடுக்கும். வேகமாக எழுத முடிவதோடு நமது அறிவை மீட்கும் வேகமும் அதிகமாக இருக்கும்.
ஏன் நல்லதே பார்க்க, கேட்க, அறிய வேண்டும் என்று முன்னோர் சொல்வர்? விதை ஒன்று போட்டால் மரம் ஒன்றா முளைக்கும். அது போல எவற்றை நாங்கள் உள் வாங்குகின்றோமோ அவற்றை ஏதாவது ஒரு வடிவில் நாம் கக்கியே ஆக வேண்டும். "எதை இங்கிருந்து எடுத்தோமோ அதை இங்கேயே கொடுக்க வேண்டும்" என்கிறது கீதை.
இறைவனை நோக்கி மந்திரங்களை ஜெபிப்பது எதற்கு?
மூட நம்பிக்கைகளை உடையவனும் திணிப்பவனும் தன் குலத்தையே தாழ்வான பாதைக்கு இட்டுச் செல்கின்றான். ஒரு நாள்... ஆனால் என்னுடைய நோக்கம் அதுவல்ல. உண்மை யாது என்பதை தெளிவிப்பது மட்டுமே. அத்துடன் நான் உங்களையும் ஆராய்ந்து பார்த்து உணரவே அழைக்கின்றேன்.
இறைவன் என்று ஒரு பொருள் வர இன்னொரு காரணமும் இருக்கிறது. அது நமது வாழ்வில் துன்பத்தில் துவண்டு பிடியற்றுப் போகும் போது துணைக்கென அழைக்கப்படுபவன் இறைவன். "மரத்தின் நிழலில் இருப்பதில் தானே இனிமை இருக்கிறது." ஆனால் நீங்கள் அன்பால் அனைவரையும் மகிழ்ச்சியாக்கி வாழ்பவராயின் அதுவும் தேவைப்படாது. ஆனாலும் தேவை இருக்கிறது. எப்படி?
முன்பு கூறியது போல, எண்ணங்கள் நமது கட்டுப்பாடு இன்றி, நவக்கிரகங்களினால் ஏற்படும் மின், காந்த, ஈர்ப்பு விசைகளின் ஆதிக்கத்திற்கு உட்படும்போது அது குழப்பத்தினை ஏற்படுத்தும். அவற்றிலிருந்து விடுபடவே இந்த மந்திரங்கள் பயன்படுகின்றன.
நீங்கள் சதாகாலமும் ஒரு கடவுளை நினைத்து, அவன் பெயரை ஜெபித்து வருகின்றீர்கள் ஆயின், உங்கள் சிந்தையில் காலத்துடன் அது கலப்பதோடு, காலம் கடந்த ஒன்றாகவும் அது மாறிவிடும். இப்போது எந்தவிசை தூண்டி என்ன பயன். உங்களுக்கு ஞாபகம் வருவது உங்களுக்கு அருளைக் கூட்டும், பக்தியைக் கூட்டும், சக்தியைக் கூட்டும், மகிழ்ச்சியைப் பெருக்கும் அந்த இறைவனின் நாமமே! "நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே" எனவே எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாகவே இருப்பீர்கள்.
அவன் நெறியில் நீங்கள் நிற்க, அவன் பெயர் நீங்கள் உச்சரிக்க, நிற்க நாளும் கோளும் அதன் நிலைகொள் தானங்களும் உங்களை ஒன்றும் செய்யாது.
இப்போது, பழைய சோகமான அனுபவங்கள் மறைக்கப் படுகின்றன; மறக்கப் படுகின்றன; மீண்டும் கோள்களின் சக்திகளால் தூண்டப்படுவதும் இல்லை. ஆகவே, நீங்கள் நவக் கிரகங்களின் ஆதிக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டவர் ஆகின்றீர்கள்.
இதற்கு மொழி, சமய வேறுபாடு எதுவும் கிடையாது. இங்கு சம்ஸ்கிருதம் சம்பந்தப்படவே இல்லை. இது முற்றிலும் உளவியல் அறிவியல். இங்கே, மந்திரங்களை சத்தமாக உச்சரித்து ஏனைய மதத்தவருடன் சண்டை செய்ய வேண்டிய தேவையும் இல்லை. அந்த மதத்தினரிடமும் உண்மை இல்லை.
சத்தமாக சில மந்திரங்கள் ஜெபிப்பதில் வேறு சில நன்மைகள் உண்டு. நாதத்தின் சக்தி அளப்பரியது. அது பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம். முடிந்தால் பகிரவும்.
Monday, May 18, 2020
குர்ரான், தேவாரங்கள், பிரித், பைபிள் ஓதுவதால் என்ன பயன்? காரிய சித்திக்குக் கடவுள் துணை எதற்கு?
ஆலயம் செல்லலாம். விரதங்கள் பிடிக்கலாம். வேண்டுதல்கள் வைக்கலாம். ஆனால் காரியங்களை நீங்கள்தானே ஆற்றியாக வேண்டும். இறைவனிடம் உங்கள் குறையை முன்வையுங்கள். இறைவனை மனமுருகி வழிபடுங்கள். உங்கள் வெற்றிக்கான பாதையை நோக்கி நீங்கள் செயலாற்றுங்கள். அதிஷ்டம் உங்கள் பக்கம் இருக்கிறது. அவ்வாறு அல்லாது அவனே வந்து அருள் புரிவான் என்று காத்திருந்து இலவு காத்த கிளியாகிவிட வேண்டாம். அதோடு ஆலயம் செல்வதால், அங்கு சடங்குகளைச் சரியாகப் பின்பற்றுவதால் பல நன்மைகள் உண்டு. அது பற்றி நான் பிற பதிவுகளின் கூறியிருந்தேன். உண்மையில் “ஆன்மா லயிக்கும் இடம் ஆலயம்” ஆகும்.
நீங்கள் எந்தவொரு சுவாமிகளிற்கு நீண்ட காலம் எப்பெயர்ப்பட்ட பணிவிடை புரிந்து ஞானம் உரைக்குமாறு வேண்டினும் அவர்கள் இதையே உபதேசிப்பர். இறைவன் என்பது ஒரு தனிப்பொருள் அல்ல. இறைவன் மீது பக்தி செலுத்த வேண்டும். உங்கள் இலக்கை நோக்கி அவனை நினைந்து கடமையாற்ற வேண்டும். அதிஷ்டம் உங்கள் பக்கம். இதுவன்றி மெய்ப்பொருள் ஏதுமில்லை. ஆனால் எப்போதுமே அழியாதது; நிலையானது ஒன்றுதான். அது சக்தி மட்டும்தான். அவன் துணைநிற்க உன்னை தீயசக்திகள் ஒன்றும் செய்ய முடியாது.
விரதம் பிடிப்பதாலும் பல நன்மைகள் உண்டு. அதனால் உங்களில் தெய்வீகம் பெருகும். ஆனால் தொடர்ச்சியான விரதங்களால் உடல் சோர்ந்து போதல் முறை அல்ல. நீங்கள் ஆரோக்கியம் குன்றினால் யார் உங்கள் கடமைகளைச் செய்வார்கள். பிறகு எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ முடியும். அத்துடன், உடல் அரோக்கியம் இல்லாமல் உயிர் இங்கு நிலைப்பதில்லை. அதைத் திருமூலர் ஒரு பாட்டில் பின்வருமாறு கூறி இருக்கிறார். “உடல் வளர்க்கும் உபாயமறிந்து உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றார்.” உங்கள் உடல் உள ஆரோக்கியம் சிறப்பாக இருக்கின்றபோது, உங்கள் பயணம் வெற்றியை நோக்கி இருக்கும்போது, ஏனையவர்கள் குழப்பங்களிலே உழலும்போது, நீங்கள் வெல்வதை யார் தடுத்துவிட முடியும். இங்கே இறையருள் தெரிகிறது. ஆனால், வேரறுத்து ஆராய்து பார்த்தால் அங்கே அருள் புரிந்து கடவுள் அல்ல; நீங்கள் தான். கடவுள் என்று ஒரு தனிப்பொருள் இல்லை.
கடவுள் இல்லையா? பிறகு கோயில்களிலே தீபதூபங்கள் எதற்கு, அபிசேகங்கள் எதற்கு, அர்ச்சனை எதற்கு, கொடி, குடை எதற்கு, யாகங்கள் எதற்கு. இத்தனை வித்தைகளும் ஏமாற்று வேலைதானா? அத்தனைக்கும் அர்த்தம் உண்டு. ஆனால் நீங்கள் அறிந்து கொண்டிருக்கவில்லை. அவற்றைக் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். இல்லையேல் அப்படியே பின்பற்றி நன்மை அடையுங்கள். அன்றேல் எதனையும் ஏற்றுக்கொள்ளாமல் உங்கள் போக்கில் கடமையைச் செய்யுங்கள். ஆனால் நிச்சயமாக இவை யாவற்றையும் கடைப்பிடிப்பவனிடம் நீங்கள் தோற்றுப்போவது பற்றி வருத்தம் கொள்ளக் கூடாது. அதாவது நீங்கள் உங்கள் ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பொருள்.
கடவுள் இருகிறார் என்பதையும் இல்லை என்பதையும் என்னால் கேள்விகளால் நிரூபிக்க முடியும். தான் படைத்த உணவை உண்ணவில்லை என்று தன் தலையைக் கல்லில் அடித்தார் நம்பி. அப்போது பிள்ளையார் வந்து அருள் புரிந்தாக ஒரு கதை இருக்கிறது. ஆனால் இன்றும் கோயில்களில் கடவுளுக்கு உணவுகளையும் பூக்களையும் நிவேதனம் செய்வது வழக்கம். ஆனால், இன்றும் இறைவன் உண்பது இல்லை. ஆனால் அதற்காக யாரும் தன் தலையைக் கல்லில் அடிப்பதில்லையே! ஏன்? கடவுள் என்று ஒரு தனிப்பொருள் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அனைவர் மனதிற்கும் ஒரு கள்ளம் இருக்கும். அது அவர்களைப் பொய்களை நம்ப வைக்கிறது. இறைவன் இல்லை என்று தெரிந்தும் ஏனையோர் நம்புவதால் அதனை உண்டு என்று எமது மனம் நம்புகிறது. இப்போது அவர்களுக்குள் இருக்கும் கள்ளம், அவர்களுக்கே வினையாகிறது. அது உண்மையை அவர்களிடம் இருந்து மறைக்கிறது. அவர்கள் இனி உண்மையத் தேடப் போவதும் இல்லை.
அன்றைய காலங்களில் வரையப்பட்ட கதைகளிலும் பாடல்களிலும் பல உண்மையான பொருட்கள் மறைந்திருக்கின்றன. ஆனால், அந்தக் கள்ளம் என்னும் இருளால் சூழ்ந்து ஞான ஒளியை அறியாதவர்களால் அவற்றை அறிய முடிவதில்லை. இறைவன் மந்திரக்கட்டுக்கு உட்படுவதாகவும் அருளற்றுக் கிடப்பதாகவும் சிலர் கருதுவர். அவற்றில் துளியும் உண்மை இல்லை. இறைவன் அளவற்ற ஆற்றல் நிறைந்தவர். அவரை யாராலும் எவராலும் அசைத்துவிட முடியாது. நீங்கள் உண்மையான முழுமையான நேர்மையான பக்தி செலுத்தும்போது அதிஷ்டம் உங்கள் பக்கமே! ஆனால் காரியம் நீங்களே ஆற்ற்றியாக வேண்டும். மூட நம்பிக்கைகள் என்னும் மாயையில் மூழ்காது அறிவுக் கண்களைத் திறந்து கொள்ளுங்கள். நான் கூறுபவற்றை நீங்கள் வெறுமனே அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டாம். நீங்களே ஆராய்ந்து பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். முழுமனதுடன் நீங்கள் ஆற்றும் காரியங்கள் நிச்சயம் வெற்றியடையும்.
குர்ரான், தேவாரங்கள், பிரித், பைபிள் ஓதுவதால் என்ன பயன்?
எதனையும் பொருள் உணர்ந்து சொல்ல வேண்டும். பொருளை அறியாதவர்கள் பொருளை நன்கு தெரிந்தவரிடம் ஒருமுறை கேட்டறிந்து அதை ஓதும் போது அப்பொருள் கொள்ள வேண்டும். அதன் விளக்கத்தை, கருவை மனதில் கொள்ள வேண்டும். இல்லையெனில் பயன் ஏதும் கிட்டாது. பொருளறிந்து ஓதின் அது உங்கள் மனதில் வேரூன்றி உங்கள் செயல்களில் பிரதிபலிக்கும். உங்களை அறியாமலே நீங்கள் வெற்றியை நோக்கி நகர்வீர்கள். இது போல நோய், பிணி தீர்க்கும் பதிகங்கள், பாடல்களும் உண்டு. அதன் தொழிற்பாடும் இதன் பாற்பட்டதே!
குறிப்பு: இறைவனிலே அல்லா, இயேசு, சிவன், புத்தர் என எந்தப் பாகுபாடும் கிடையாது. அதே போல ஆலயம், தேவாலயம், விகாரை, மசூதி என்பவை வேறுபட்டவை அல்ல. ஆராய்ந்து பார்த்தால் எல்லாம் ஒன்றுதான். கடவுள் என்றால் கடவுள். அவ்வளவுதான்.
Friday, May 15, 2020
இறைவா இருந்தால் எழுந்தருள்க. இரவு ரயில் பயணம். நள்ளிரவு 12.00 மணி.
அவர் தொடர்ந்தார். "சற்றும் உணர்ச்சி இல்லாதவர்கள். நான் கேட்டும் தர மறுகிறார்கள். சட்டத்தை மதிப்பதில்லையா. அனைவருக்கும் புத்தி பேதலித்து விட்டதா?" இப்படிப் பல. பிறகு அமைதியாக ஒரு பஜனைப் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்து விட்டார். எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உண்டு. ஆனால், கடவுள் எமது பஜனை, வேண்டுதல்களை ஏற்று அருள் புரிகிறாரா என்று நீண்ட நாளாகச் சந்தேகம். எந்த மதமாயினும் சரி. எல்லா மதங்களிலும் இது போன்ற வேண்டுதல்கள் உண்டு. பௌத்தத்தில் பிரித்தோதுகிறார்கள், இஸ்லாமில் குரான் ஓதுகிறார்கள். கிறித்தவத்தில் பைபிள் வாசிக்கிறார்கள். இந்துக்கள் பஜனைகள், பஞ்சபுராணம் படுகிறார்கள். நீங்கள் இந்துவாயின் இறுதியில் கருதியதாகக் கோபிக்க வேண்டாம். நீங்கள் என்னைப் புரிந்து கொள்வீர்கள். அதனால்தான்.
நான் கடவுளை நம்பியே இத்தனை காலம் வாழ்ந்தவன். ஆனால் இப்போதெல்லாம் மனிதர்களின் மீதும் மனிதம் மீதும் தான் அதிகம் நம்பிக்கை கொள்கிறேன். இத்தனை வழிபாடுகள், பூஜைகள் நடப்பினும் இறுதியில் மக்களோ துன்புறுகிறார்கள், துன்புறுத்துகிறார்கள். இப்படி ஏன் நடக்கிறது? அவற்றின் நோக்கம் நிறைவேறவிலையே! இதுபோலப் பல கோடி பேர் இறைவனை நம்பி, அவன் புகழ் பாடி, அவன் அடி பணிந்து, விரதங்கள் இருந்து, பல கடுமையான நேர்த்திகள் செய்து ஏமாந்து போயிருக்கிறார்கள். சிலர் ஆனால் வெற்றிகள் பலவும் குவித்திருக்கிறார்கள். இங்கே மதங்களை விட்டு விடுங்கள். ஒரு பக்தன் (என் அன்னை உட்பட) வாழ்நாளில் கூடிய காலத்தை கடவுளுக்கு அர்ப்பணித்து பல நாள் உண்ணாமல் விரதங்கள் எல்லாம் இருந்து, துன்பங்களை மட்டுமே அனுபவித்து மடிவானாயின் இதில் என்ன நியாயம் இருக்கிறது.
நீங்களே கூறுங்கள்?
இறைவா! நீ இருந்தால் எழுந்தருள்க.
Wednesday, May 13, 2020
இன மத யாதிப் பாகுபாடுகள் ஏன்? உண்மை நிலை என்ன?
சிங்களவர், தமிழர், முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர், யாதிகள் எனப் பல பிரிவுகள் வைத்துத் தமது காரியங்களைச் சாதிப்பார்கள், சானக்கியர்கள். என்னைப் பொறுத்தவரையில் இந்த உலகில் மக்கள் இருவகைதான். அடிப்படையில்,
- நல்லவர்
- கெட்டவர்
இனம் காண்பது கடினம்தான். நீங்கள் செய்யக் கூடியது ஒன்று மட்டும் தான். அது, எப்போதும் நீங்கள் உங்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளவதுதான்.
சாதி எனப் பாகுபடுத்துவர்; ஒத்தவரையே திருமணம் முடிப்பர். திருமணம் என்றதும் அழகு என்பது இன்றைய இளைஞர், யுவதிகள் அநேகர் வேண்டுவதே. அதற்கும் யாதிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஒரே சாதியினுள்ளேயே ஏழை, பணக்காரன், வெள்ளை, கறுப்பு, உயரம், குள்ளம் எனப்பல மாறுபாடுகள் உண்டு. இவை எல்லாம் மாறுபடாமல் இருப்பது ஒரே பரம்பரை/சந்ததியினுள் மட்டுமே.
பிறகு இந்தப் பாகுபாடுகள் ஏன்? சானக்கியர்கள் தமது காரியசித்திக்காக ஏற்படுத்திக் கொண்டவையே இவை. "அனைத்து யாதிக்காரர்களுடனும் நட்புப் பாராட்டுவர்; சேர்ந்து திரிவர்; அவர்தம் வீட்டிலும் கூடுவர்; ஒரே தட்டில் உண்பர்; தன் உயிர் நண்பர் என்பர். ஆனால் திருமணம் மட்டும் அந்த யாதிக்காரருடன் செய்ய மாட்டார்கள்." என்று என் அப்பா சொன்னார். இதில் என்ன நியாயம் இருக்கிறது என்று தெரியவில்லை.
இது பற்றி யாதி பேதம் பாராட்டாத ஒருவரிடம் கேட்டபோது அவர் பினவருமாறு சொன்னார். "தனக்கு அதில் உடன்பாடு இல்லைத்தான். ஆனால், தன் வீட்டாருக்காகத்தான் தன் யாதிக்காரரையே திருமணம் செய்து கொள்வாராம். தன் பிள்ளைகளை அதுபோல நிர்ப்பந்திக்க மாட்டாராம்." மறையப்போகும் அவரது முன்னைய சந்ததிக்காக, மலரவிருக்கும் மலர்களை வெறுக்கின்றார் அவர். ஆனால் இதுவும் உண்மை அதற்காக ஒருவரை வற்புறுத்தித் திருமணம் செய்து கொள்ளவும் கூடாது. அவருக்கு எடுத்துக் கூறிப் புரிய வைக்கலாம்.
"No means No"
ஆனால், இந்த சிங்கள, தமிழ் மொழிபேதங்களில் உண்மையில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கினறன என்பதை மறுக்க முடியாது. அதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
Saturday, May 2, 2020
எதிலும் அதிகமாக ஆசை வைக்கக் கூடாது?
”வாழ்க்கையில் துன்பத்திற்குக் காரணம் எதிர்பார்ப்பு” என்று சொன்னார் புத்தர். நீண்டகால தவத்தின் பின் அவர் கண்டு கொண்ட அரிய ஞானங்களில் இதுவும் ஒன்று.
நாம் ஒரு காதலை எதிர்பார்க்கும் போது, அதில் பல முடிவுகள் எடுக்கும் தருணங்கள் வரும். இதனால் சிந்தையெல்லாம் அதே எண்ணமாகிக் குழம்பி ஏனையவற்றில் நாட்டம் விட்டுப் போகும். பின் நாம் தனிமையை உணர்ந்து கொள்கிறோம். காதலில் வெற்றி அடைந்து வாழ்வோரைக் கண்டு குழம்புகிறோம். உள்ளத்தில் உள்ளதையே வெளியே காண்கிறோம். தற்காலத் தமிழ் திரைப்படங்கள் கூட, அதை மட்டுமே ஊக்குவித்து அதில் ஒரு ஏக்கத்தை உண்டு பண்ணுகின்றன. அதில் அவர்கள் இலாபம் தேடிக் கொள்கிறார்கள். இளைஞர்களோ ஜோடிகளைத் தேடி, ஏக்கங்கொண்டு துன்புறுகிறார்கள். முன்னேற்றம் முற்றாகத் தடைப்படுவதால் மன அழுத்தத்துக்கும் உள்ளாகிறார்கள். காதல் பாடல்களும் காதல் தோல்விப் பாடல்களும் அவர்களை மெய்மறக்க வைத்து ஏக்கத்தைக் கூட்டுகின்றன. அந்த ஏக்கம் அப்போது இன்பமாக இருக்கலாம். நாளடைவில் உனக்குள்ளேயே அது குட்டையில் கழிவு போலத் தேங்கித் துன்பம் தரும்.
”யாரோ யாரோடு இங்கு யாரோ, யாருக்குக்குள் இங்கு யாரோ, யாரோடு இங்கு யார் சொல்வாரோ? புரியாத ஒரு கேள்வியே” என்பது ஒரு பாடல் வரி. இது தான் வாழ்க்கையில் துன்பத்திற்குக் காரணம் ஆகும். அந்த ஏக்கம், இளைஞர்களின் அனைத்துக் கவனத்தையும் அதற்கே திருப்பி ஏனைய வளர்ச்சிகளைச் சிதறடிக்கிறது. திரையுலகு கூட அதையே, அதைக் குறித்த தேடலையே இளைஞர்கள் மனதில் விதைக்கிறது. இதுவே தெற்காசியச் சமூகத்தின் நாகரீக வளர்ச்சி இன்மைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. ஆனால் என்ன, அங்குள்ள மக்கள் அவர்களுக்குப் பிடித்ததைச் செய்கிறார்கள், அவ்வளவு தான்.
Love is everything
Trust is love
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? ஒரு சிந்தனையற்ற கடவுள்
இறைவன் சக்தி வடிமானவர். அந்த எண்குணங்களுடையவர். அதன்படி அவர் உருவமற்றவர்; அவருக்கென்று சொந்தமாக சிந்தனைகள் கிடையாது அதாவது மூளையில்லை. நமது சிந்தனையிலேயே அவர் உருப்பெற்று வாழ்கிறார். அவருக்கான உருவத்தை வழிபாட்டுக்காக நாமே உருவாக்குகின்றோம். அவர் எமது உள்ளங்களிலேயே வாழ்கிறார். நம் மனங்களில் உள்ள நம்பிக்கையே இறை வடிவம் பெறுகின்றது.
ஒருவன் தன்னுடைய காரியங்களைத் தானே செய்து முடிக்க முடியாமல் போனால், பிறரின் உதவியை நாடுகிறான். கடவுளை நோக்கிய தேடலும் அது போலத்தான். ஒருவனால் தன்னை தானே பத்திரமாகப் பார்த்துக் கொள்ள முடிந்தால், ஒருவன் தனக்கு வேண்டியவை அனைத்தையும் அவனே படைத்திருந்தால், கடவுள் அருள் அவனக்கு அப்போதே உண்டு என்றே பொருள். அவன் நாத்திகனாக இருந்தாலும் அதனால் எதுவும் ஆகிவிடாது. அவன் ஏற்கனவே தன்னிறைவையும் பூரணத்துவத்தையும் அடைந்து விட்டான்.
கடவுளை எப்போதோ விஞ்ஞானம் கண்டு விட்டது. ஆனால் அறிந்து கொள்ள வில்லை. அது சக்தியே. ஆற்றுவது சக்தியின் இயல்பு. நீ உன் கடமைகளை ஆற்றுகிறாய். நான் என் கடமைகளை ஆற்றுகிறேன். ஆற்றும் இயல்பு உன்னிடமும் இருக்கிறது. என்னிடமும் இருக்கிறது. அது தான் கடவுள். கடவுளை மெஞ்ஞானிகள் அறிந்திருந்தார்கள் ஆனால் சில காரணங்களுக்காக அவற்றை வழிபாட்டு முறைகளாக வகுத்து மறைத்து விட்டனர்.
இன்று பக்தர்கள் இறைவன் வரவில்லை; அருள் புரியவில்லை என்கிறார்கள். எப்படி வருவான். உனக்குள் இருக்கும் இறைவனை நீ வெளியே உன் உறவுகள் போல வந்து உதவுவான் எனத் தேடுகிறாய். அது ஒரு போதும் நடக்காது. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி என்கெங்கோ அலைகின்றாய். உன் கடமைகளை சரியாகச் செய்ய வேண்டும். கோயிலுக்குச் சென்று வகுக்கப்பட்ட வழிபாட்டு முறைகளில் வழிபடல் நன்று. அதற்காக நினைத்ததைக் தெய்வம் நிறைவேற்றவில்லை என்றால் அது உன் தவறு தான். கல்லின் தவறு அல்ல. நீ உன் வழிபாட்டில் திடமாக இருந்திருக்கவில்லை. ஆற்றும் சக்தி உன்னிடமே இருக்கிறது. கடவுள் உன்னிலேயே இருக்கிறான்.
மகாபாரதத்தில் கண்ணன் கூறியிருக்கிறான். நான் நானாக ஒரு போதும் இருந்ததில்லை. யாதுமாகி இருக்கிறேன். உலகிலே அநியாயங்கள் தலை தூக்கும் போது மாயை என்னும் உடல் கொண்டு அவதரிக்கிறேன். மாயை என்றால் என்ன? சக்தியே உடலாக எய்தி அவதரிப்பது. இன்னும் எளிதாகச் சொல்லப் போனால் தீ ஒரு வகை சக்தி. அத்தீயிலேயே உடல் கொண்டு ஒருவன் பிறந்து விட்டால், அது தான் அது.
வெறுமனே மந்திர உட்சாடனங்களோ உதடுகள் உதிர்த்த வார்த்தைகளோ அவரை வருவிக்குமா இல்லை கட்டிப் போடுமா?
நாம் தமிழ் பேசுகிறோம். இன்னொருவர் சிங்களம் பேசுகிறார். இன்னொருவர் இன்னொன்று... இவ்வாறு இருக்க புரியாத மொழியில் சொல்லும் ஏதோ சில வார்த்தைகள் எப்படி இறைவனைக் கட்ட வல்லது. அந்த மந்திர உட்சாடனங்களிற்குக் காரணமான சக்தியே அவராக இருக்க எப்படி தனியா வரவோ அதற்குக் கட்டுப்படவோ முடியும். ஒருபோதும் கடவுளைக் கட்டிப் போட முடியாது. கடவுள் என்றால் கடவுள் தான். அவரை மீறி எந்த சக்திகளும் இல்லை என்பதே பொருள்.
நமது பிரச்சினைகளுக்கு எப்போதும் என்ன காரணம் ஆகிறது. மனித மனங்களில் உள்ள வஞ்சக எண்ணங்களே அவற்றுக்குக் காரணம் ஆகின்றன. எனில் கடவுள் யார்? அவர் எங்கே இருக்கிறார். அதே மக்கள் மனங்களில் நல்ல எண்ணங்கள் பெருகி செயலுருப் பெறும் போது கடவுள் அங்கே இருக்கிறார். அங்கே காணும் அந்த நல்ல எண்ணங்களே கடவுள் ஆவார்.
இறைவன் வாழும் கோயில் நமது உள்ளம் தான்.
'உள்ளம் பெருங்கோயில் ஊணுடம்பு ஆலயம்' என்றார் திருமூலர்.
எப்படி நம் மனம் நினைத்ததும் அதைச் செய்யத் தேவையான சக்தியை உடல் எய்துகிறது! நமது எண்ணங்களே நம்மை வழிநடத்துகின்றன. அவற்றைத் திடமாக வைத்திருப்பதற்காகவே இந்த மந்திரங்கள். நாம் தொடர்ந்து ஒரு விடயத்தை வேண்டி மந்திர உட்சாடனங்கள் செய்யும் போது, அந்த விடயத்தில் நமது மனம் ஊறிவிடுகிறது. அவ் எண்ணங்கள் வலிமை கொள்கிறது . பிறகு அது நமக்குத் துணை நிற்கிறது. மகாபாரதத்தில் கிறிஸ்ணர்,
விவேகானந்தர் இதையே 'நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுகிறாய்' என்கிறார்.
பிறகு இறை வழிபாடு, ஆலயம் செல்லுதல் வீணானவையா?
இல்லை. நாம் நம்மை வழிப்படுத்தவும் வலுவூட்டவும் வகுத்துக் கொண்டவையே மதங்களும் சமயங்களும் ஆகும். நாம் விரதங்கள் இருக்கிறோம். இறை நாமம் சொல்கிறோம். கோயிலுக்குச் செல்கிறோம். இவற்றில் நன்மை நிச்சயம் உண்டு. மனம் ஒரு குரங்கு. அதை யாராலும் கட்டிப் போட்டு விட முடியாது. நாம் நினைப்பதையே பேசுகிறோம். அதையே செய்கிறோம். ஆனால் மனதை ஒரு முகப் படுத்தாமல் வெற்றியடைவது கடினம். அதற்கான வழிகள் தான் அவை. ஆனால் இவை வெறும் நமது மனம் மட்டும் சம்மந்தப்பட்டது அல்ல. அது ஒரு மேம்பாடு. நாம் ஒரு விடயத்தை நினைத்து இறைவனை நோக்கி வழிபடுகிறோம். இப்படி ஒவ்வொருவரும் இறைவனை நம்பி ஆலயம் வரும்போது. அனைவர் எண்ணங்களும் சேர்ந்து ஒரு முகப் படுகிறது. அங்கே ஒரு சக்தி தோற்றுவிக்கப்படுகிறது. இது ஆலயம் செல்வதால் கிடைக்கும் நன்மை.
இதை விடுத்து இறைவனை தொழுதாலும் நன்மை உண்டு. இயல்பாகவே நேரான சிந்தனைகள் நன்மைகளையும் மறையான சிந்தனைகள் தீமைகளையும் பயப்பன. காரணம் மனித சிந்தனைகளே உலகில் மாற்றங்களைச் செய்கிறது. ஆனால் அந்த சிந்தனைகளின் வலிமையே எந்த அளவுக்கு அவை மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைத் தீர்மானிக்கின்றன. நாம் ஒரு விடயத்தைச் செய்து முடிக்க வேண்டும் எனிலும் நாம் அதே போல அந்த விடயத்தில் மிகவும் தீர்க்கமாக இருக்க வேண்டும். அந்த தீர்க்க நிலையை எல்லோராலும் இலகுவில் விரைவில் அடைந்து விட முடியாது. அதற்கு அனுபவ அறிவு வேண்டும். ஆனால் அதனை நாம் விரதம் போன்ற கொள்கை சேர்ந்த உடல் சார்ந்த செய்கைகள் முலம் அடையலாம்.
இறைவன் புகழ் பாடுவதால் என்ன நன்மை. இயல்பாக மறை எண்ணங்கள் தோன்றக் காரணம் ஆணவம் ஆகும். நாம் இறைவன் புகழ் பாடும் போது அது அழிந்து போகிறது. மனிதனுக்கு முதல் எதிரி பயம் ஆகும். அது நம்முள்ளேயே இருந்து நம்மையே அழிக்கிறது. இது போன்ற வழிபாடுகள் இறைவன் எப்போதும் எம்முடன் உள்ளான் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது. நாம் எவ்வளவு ஒரு விடயத்தில் தீர்க்கமாக உள்ளோம் என்பது நம் செயல்களில் மட்டும் பிரதிபலிப்பது இல்லை. நம்மைச் சூழ உள்ளவர்களிலும் பிரதிபலிக்கிறது.
கற்சிலையில் கடவுளா? இது மூடத்தனம் அல்லவா?
இறைவன் என்றால் நாம் காணும் வெறும் கற்சிலைகளல்ல. அது ஒரு உணர்ச்சிப் பிரவாகம். அங்கே நாம் காண்பது எமது விம்பத்தைத்தான். அங்கே அபிஷேகம் செய்து, பூப்போட்டு, தீபம் ஏற்றி வழிபடும் போது நம்மைத் தான் நாமே பூஜிக்கிறோம். நமக்குள்ளேயே தான் அப் பிரவாகம் உருவெடுக்கிறது. கால்களிலே தொடங்கி, இடையிலே பன்மடங்காகி, வயிற்றிலே முடுக்கப்பட்டு, மார்பினூடும் சிரசினூடும் வெளிப்படுகிறது. ஒரு மாய மந்திரமும் இல்லை. ஒரு உந்து சக்தி அவ்வளவு தான்.
இறைவன் வீற்றிருப்பதாக ஆன்றோர் காட்டும் கொன்னிலைகள் யாவும் அதீத அர்த்தமுள்ளவை. பண்டைய மெய்ஞ் ஞானிககளால் கண்டறியப்பட்டவை. அவை ஒவ்வொன்றும் பல சித்துக்கள் நிறைந்தவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சக்திகளைத் தூண்டுவதாகக் கண்டறியப்பட்டவை. நடராசர், பள்ளி கொள்ளும் விஷ்ணு, குழலூதும் கண்ணன், அர்த்தநாரீஸ்வரர்.. இன்னமும் பல. ஆனால் அவற்றை நேரடியாக மனிதர்களிற்கு அறிவித்தால் விளைவு விபரீதம் ஆகிவிடுமோ என மெஞ்ஞானிகள் பயந்தார்கள். ஆனால் மக்கள் மீது அக்கறையும் கொண்டிருந்தார்கள். எனவே இதனை மக்களுக்கு நன்மை பயக்குமாறு செய்ய ஒரு சூட்சுமத்தை வகுத்தார்கள்.
அவை தான் நாம் காணும் கற்சிலைகள். நாம் கோயில்களுக்குச் சென்று இறை தரிசனம் பெறுகிறோம். அதாவது சிலை தரிசனம். 'சிலை என்ன செய்யும்; கல்தானே. அக்கல்லில் பொதிந்துள்ள சக்தியை ஒரு பௌதீகவியலாளன் கண்டு வியப்பான்.' அது நமது ஆழ் மனதுக்குச் சென்று பதிந்து கொள்கிறது. பின்னாளில், ஒரு சங்கடம் உருவாகிறது. சிந்திக்க முடியாத நிலை. இப்போது என்னாகும். ஏதோ ஒரு கொன்னிலை ஏற்று அவன் உடைந்து போகிறான். உள்ளே இருப்பது தானே வெளியில் வரும். இயல்பாகவே அந்த நிலைகள் அவன் பார்த்த அந்த இறைவன் வடிவுக்கு ஒப்பாகிறது. சக்து தூண்டப்படுகிறது. சக்தி அவனுக்குச் சாதகம் புரிகிறது; துன்பம் நீங்குகிறது.
எங்கிருந்து வந்ததிந்த சக்தி?
ஆலயங்களில் உள்ள கல் விக்கிரகங்கள் எப்படி சக்தி பெறுகின்றன? நாம் எல்லோரும் 'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடங்களில் தேடி அலைகிறோம்'. உள்ளே வைத்துக் கொண்டு வெளியே தேடுகிறோம். இறைவன் எங்கும் நிறைந்து நிற்கிறான். நம்முள்ளுள்தான் அறிதல் நிலையில் உயிராக இருக்கிறான். ஆனால் எப்போதும் வெளிப் படுவதில்லை. அன்பு, கருணை, ஜீவகாருண்யம் கொண்டோரிலும் ஞானிகளிலும் மிளிர்கிறான். இறையருள் நம்முள் இருந்துதான் வருகிறது என்பதை உணராமல் வெளிப்பொருள் ஒன்றில் இருந்தே வருகிறது என்பது மடைமை. எனினும் அவன் அருளாலே அவன் தாள் வணங்கவே, இந்த வழிபாடுகள், தானங்கள், தவங்கள், விரதங்கள் எல்லாமே துணை நிற்கின்றன!
அந்தணர்களினதும் துறவிகளினதும் முதற் கடமை யாது?
அந்தணர்களினதும் துறவிகளினதும் முதற் கடமை தவம் உஞற்றுதல் ஆகும். இந்த உலகும் உலக வாழ் மக்களும் நன்மை பெற தவம் உஞற்றுதல் ஆகும். முற்காலத்தில் முனிவர்களும் சித்தர்களும் பலர் வாழ்ந்துள்ளனர். ஆலயங்கள் பல தோற்றம் பெற அவர்களே காரணமாயினர். அவர்கள் உணவினை செல்லுமிடங்களில் உள்ள மக்களிடம் இரந்து உண்பர். துறவி உணவு கேட்டால் கொடுக்க வேண்டியது அனைத்து மக்களினதும் கடமையாக இருந்தது. இல்லையெனில் பாவங்கள் வந்து பீடித்துக் கொள்ளும். ஏனெனில் தவசிகளும் முனிவர்களும் அந்த மக்களுக்காகவே தவம் உஞற்றுகின்றனர். அப்படி இருக்கையில் அது நியாயம் தானே!
இதிலே பக்தர்களின் பங்களிப்பு யாது?
இதிலே பக்தர்களின் பங்களிப்பும் ஒன்று உண்டு.விரதங்கள் மேற்கொள்ளும் பக்தர்களின் ஆன்மா பெருகி அவர் வாழும் சூழலிற்கே அது நன்மை பயக்கிறது. கல்லாக இருக்கும் இறைவனுக்கும் அது சக்தி கொடுக்கிறது. இவ்வகையிலே இறைவனிற்கு சக்தி அளிப்பவனும் பக்தனே ஆகின்றான். இறைவன் என்று அந்த உருவச் சிலையைத்தான் கூறுகிறேன். எங்கும் நிறை பரப்பிரம்மத்திற்கு சக்தி அளிப்பவன் மனிதன் என்று அது பொருள்படாது
கடவுள் எனத் தனியாக இருந்து சிந்திப்பவர் இல்லை என்பதே எனது இது வரையான வாதமாக இருந்தது. ஆனால் நிறைய மனிதர்கள் காலாகாலமாக ஒரு தெய்வத்தை மனதில் நினைந்து வழிபட்டு வரும்போது. அந்த எண்ணங்கள் அவருக்கு ஒரு உருவம் அளித்து அவர்கள் ஆத்மா அவர்களுக்கு உரமாகி கடவுள் தோன்றுவாரோ என்ற சந்தேகமும் நம்பிக்கையும் எனக்கும் இன்னும் இருந்து கொண்டே உள்ளது. அப்படி நிகழின் எனக்கும் மகிழ்ச்சிதான். அது தவிர சக்தி ஒன்றே கடவுள் என்பதே என் கருத்து. சக்திக்கு ஆற்றும் இயல்பும் ஆக்கும் இயல்பும் அழியும் இயல்பும் உள்ளது. நீயும் செயல் ஆற்றுகிறாய். நானும் செயல் ஆற்றுகிறேன். நம் சிந்தைகள் அதற்கு உரமாகிறது. ஆக கடவுள் உன்னிலும் இருக்கிறார். என்னிலும் இருக்கிறார். உள்ளே வைத்துக் கொண்டு வெளியே தேடுவது வீண் என்பதே என் வாதம்.
நியாயம் யாரின் பக்கம்?
தப்புப் பண்ணாத மனிதனும் இல்லை. தப்புப் பண்ணலண்ணா அவன் மனிதனே இல்லை. ஆனால் அதை அறிந்தே sஎய்வது மிகவும் தவறு. அதையே திரும்பத் திரும்பப் பண்ணுவது மிகமிகத் தவறு. தப்புப் பண்ணலாம்; திருந்தலாம். அதன் பின்பு அதைத் திரும்பியே பார்க்கக் கூடாது.
ஆனால், உண்மையில் சரி எது தப்பு எது என்று எதுவும் இல்லை.
நதி போல ஓடிக் கொண்டிரு!
குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான். எனில் இன்னமும் குரங்குகள் எப்படி எஞ்சியிருக்கின்றன?
”நீ எது நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுகிறாய்” என்று விவேகானந்தர் கூறினார். இதையே முன்னோர் இதனையே "எண்ணம்போல வாழ்க்கை" என்பர். நீ எண்ணங்களின் பிரதிபலிப்பே. இந்த விளைவின் உக்கிரம் அவ் எண்ணத்தில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் தீவிரத்திலேயே தங்கியுள்ளது. இதனை ஊக்குவிக்கவே ஆன்மீகம், கடவுள், பக்தி, வழிபாடு எல்லாம் வளர்ந்தன; வளர்க்கப்பட்டன.
எண்ணங்கள் நித்திரையில்தான் ஆழ் மனதுடன் சங்கமிக்கும். அதனால்தான் விஞ்ஞானி அப்துகலாம் ”இளைஞர்களே கனவு காணுங்கள் என்றார்”. அவர் ஆழமான சிந்தனையை அவ்வாறு கூறியிருக்க வேண்டும். ஒரு இலட்சியத்தை வைத்து, அது குறித்தே சதாகாலம் சிந்தித்திருப்பதைத்தான் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். நீங்கள் என்பது நீங்கள் அல்ல; உங்கள் எண்ணங்கள், நீங்கள் பிறந்ததிலிருந்து நீங்கள் கண்டவற்றின் சாரம். இது உள்ளே ஆழ்மனதில் பதிவாகியிருக்கும். அதன்படியே உங்கள் சிந்தனைகளும் முடிவுகளும் அமைகின்றன. ஆனால் நீங்களோ அந்த முடிவுகளை நீங்களே எடுப்பதாகக் கருதுகிறீர்கள். ஆனால் உண்மையில் முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர்தான் அவை உங்கள் சிந்தனைக்கே அது வரும்.
என்னைப் பொறுத்தவரையில் இந்த உடலிலுள்ள ஒவ்வாமை தவிர்ந்த ஏனைய நோய்களை நாமே பிடித்து வைத்திருக்கிறோம். அதாவது சுயநினைவோடு அல்ல. ஆழ் மனதினால் பிடித்து வைத்திருக்கிறோம். நம் நிறம், அறிவு, அழகு முதல் கொண்டு பழக்க வழக்கம் யாவற்றையும் நம்மால் மாற்ற முடியும். இன்னொருவருக்கும் மாற்ற முடியும். பரம்பரை இயல்பு என்பவை இவை தான். ஏனையவை போலியானவை. நான் பரம்பரை எடுத்து வருபவை என்று கருதுவது இவற்றைத் தான். அந்த ஆழ்மனம் கொண்டுள்ள பழக்கவழக்கங்களும் நமது இரத்தமும். இல்லையெனில் குரங்கிலிருந்து மனிதன் எப்படி வந்தான். எண்ணம் போல் வாழ்க்கை.
மெஞ்ஞானத் தேடல் இருந்த போது மெஞ்ஞானம் வளர்ந்தது. விஞ்ஞானத் தேடல் இருந்த போது விஞ்ஞானம் வளர்ந்தது. இனி என்ன ஞானம் வளர இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. இவை அனைத்தும் தாண்டி எல்லாம் பொய். காயமே இது பொய்யடா! காற்றடைத்த பையடா!
”Imagination can takes you anywhere” - Sir. Albert Einstein
Latest Updates
-
Highlight: ஆதாமும் ஏவாளும் தாவும் தமிழ் குரங்கும், எலி வாலுமா? Kannan Man Theory தமிழை Reference ஆக்கிய ஆ.தாமோ, பிரித்து அழிக்கும் ஏ.வால் ...
-
The civil war between the Sinhalese and Tamils in Sri Lanka is deeply rooted in religious and cultural divides, where Ravana/Muruga—symbols ...
-
The epics of Mahabharata and Ramayana offer a nuanced history of the lineages, roles, and movements of communities across Bhar...





