ஒரு குட்டிக் கதையுடன் பதிவை ஆரம்பிக்கிறேன். அம்மா ஒரு கதை சொன்னார், தான் ஒருமுறை விடத்தல்தீவு என்னும் ஒரு இடத்திற்கு, பேரூந்தில் செல்லும்போது, அயந்து தூங்கி விட்டதாகவும், திடீரென அவ்விடத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் உள்ள இயேசு காட்சி தந்தததால் திடுக்கிட்டு விழித்துக் கொண்டதாகவும், தன்னால் சரியான இடத்தில் இறங்க முடிந்ததாகவும், அல்லாவிடில் தான் இறங்க வேண்டிய இடத்தைத் தவற விட்டிருப்பேன் என்றும் சொன்னார்.
நான் அதற்கு பின்வருமாறு கூறினேன். அப்பிரதேசத்தில் உள்ள மக்கள் அந்த தேவாலயத்திற்கு தினமும் சென்று வழிபடுபவர்களாக இருப்பார்கள். அதனால் நீங்கள் அந்த இடத்தைக் கடக்கும்போது அவர்களது அந்த எண்ண அலைகள் உங்கள் மனதில் கலந்து அது போன்ற காட்சி கிடைத்திருக்கும் என்றேன். அந்த அலைகளின் தூய்மை உங்களை எழுப்பி இருக்கும், என்றேன். தான் கண்டது அந்த ஊர் தேவாலய இயேசுவை ஆயிற்றே! என்று அம்மா கூறினார். எல்லா இயேசு சிலைகளும் ஓரளவு ஒருமைப்பாடு உடையவையே! அவை அந்த ஊர் கட்டிட அமைப்புகளுடன் கலந்து அவ்வாறு காட்சி தோன்றி இருக்கலாம்.
நான் சொன்னேன், அப்போது உங்களுக்கு ஒரு நடனத்தைக் காட்சிப்
படுத்திப் பார்க்கும் அளவிற்கு மனம் தெளிவாக இருந்தது. ஆனால், இப்போது
அந்த அளவிற்குத் தெளிவு இல்லை. அதனால்தான் உங்களால் அது போன்ற காட்சிகளைக்
காண முடிவதில்லை. எதிரிகள் எத்தனை குழப்பங்களும் செய்யலாம். அது உங்கள்
தெளிவிற்குத் தடையாக இருக்காது. ஆனால், நீங்கள் அக்குழப்பங்களிற்கு இசைந்து
கொடுப்பதுதான் உங்களைக் குழப்புகின்றது. நீங்கள் தடுமாறாமல் நிலையாக
இருந்தால், யாராலும் உங்கள் தெளிவை உங்களிடம் இருந்து பறிக்க முடியாது.
நல்ல வேளை, நமது ஊரில் விகாரைகள், மசூதிகள் போன்றன பெரிய அளவில் இருந்திருக்கவில்லை. இல்லையெனில், அல்லா, புத்தர் ஆகியோர் கூட அம்மாவிற்குக் காட்சி கொடுத்திருப்பார்கள்.
இப்போது தலைப்புக்கு வருவோம். கடவுள் இந்த அளப்பரிய பிரபஞ்சத்தை, எண்ணரிய உயிர்களைப் படைத்தார் என்பதை ஐன்ஸ்டீன் கூட ஏற்றுக்கொள்கிறார். நானும் ஏற்றுக் கொள்கிறேன். எனவே கடவுள் இருக்கிறார். எல்லாமாக உறைந்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம்.
ஆனால், அவர் யார்? எப்படி இருப்பார்? கடவுள் ஒருவரே. ஆனால் என்னுடைய கருத்துப்படி, நாம் பார்ப்பது போல, சிவன், சக்தி, புத்தர் என உருவம் எதுவும் இருந்திருக்கவில்லை. அந்த வடிவில் அவர்கள் வந்து அருளும் புரிந்திருக்க வாய்ப்பும் இல்லை. இஸ்லாமிய மதம் இதைக் கருதியே உருவமற்ற தொழுகைகளை வகுத்திருக்கிறது.
பிறகு, இது போன்ற உருவங்களை கொடுத்தது யார்?
மனிதனே இந்த வடிவங்களைக் கடவுளுக்குத் தந்திருக்கிறான். இதனையே நான் "கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதன் கடவுளைப் படைத்தான் என்கிறேன்".
ஏன் இந்த உருவ வழிபாடு? ஏன் இந்தத் பூஜைகள், தொழுகைகள், தேரோட்டங்கள், பஜனைகள்?
மிருகப் பிறவியில் இருந்து மனித வாழ்க்கைக்கு மாற மனிதர்க்கு, பக்தி அவசியமாகும். உயிரை உடலெங்கும் நிறையச் செய்து காரியங்களை சிறப்புறச் செய்ய பக்தி அவசியமாகிறது. பக்தியின் அவசியம் பற்றி இன்னொரு பதிவு இட்டுள்ளேன். ஆனால், பக்தி செலுத்த எல்லாம் வல்ல ஒரு பொருள் தேவைப்பட்டது. அதுவும் உருவ வழிபாடு ஏற்படுத்தப்பட ஒரு காரணமாகும். அது மட்டுமன்றி, மனிதனின் எண்ணங்கள் வலிமை வாய்ந்தவை. பின்னாளில் செயலுருப் பெறுபவை. அதேபோல மக்கள் எழுச்சியால் ஏற்படும் பேரலை மிகவும் வலிமை (சக்தி) வாய்ந்தது. அது இந்த உலகில் நினத்துப் பார்க்க முடியாத, நுண்ணியமான பல மாபெரும் மாற்றங்களை நிகழ்த்த வல்லது. ஆனால், அது போன்ற ஒருமைப்பட்ட எழுச்சியை, பேரலையை ஒரு தனிமனிதனால் ஏற்படுத்திவிட முடியாது. அது போன்ற போன்ற பேரலை நிகழ்வதையோ, அதில் தானும் பங்கு கொள்வதையோ ஒரு தனி மனிதன் அறிந்திருக்க மாட்டான்.
அதனை நாம் எப்படி ஏற்படுத்துவது என்று சிந்தித்தபோது மனிதன் கடவுளுக்கு ஒரு உருவம் கொடுக்கிறான். மதம் என்று ஒரு பெருங் கூட்டத்தைத் திரட்டுகிறான். அக்கூட்டத்தினர் ஒரே சிந்தையில் அந்த இறைவனை நோக்கி வழிபடுகிறார்கள். எண்ணங்கள் சங்கமிக்கின்றன. இதனையே ஆன்மீகம் என அழைத்தனர். இப்போது ஒவ்வொருவர் எண்ணங்களையும் வேண்டுதல்களையும் அந்த கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களை அறியாமலேயே சுமந்து கொள்கின்றனர். அது சுமையே அல்ல. கூட்டு வேலையின் எளிமை பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. அங்கே காலப்போக்கில் சில சடங்கு, சம்பிரதாயங்கள் வந்து ஒட்டிக் கொள்கின்றன. இவ்வாறுதான் தெய்வங்கள், மதங்கள் தோன்றின.
இறைவனிற்கு சக்தி அளிப்பவன் பக்தன் ஆகின்றான். இறைவன் என்று அந்த உருவச் சிலையைத்தான் கூறுகிறேன். எங்கும் நிறை பரப்பிரம்மத்திற்கு சக்தி அளிப்பவன் மனிதன் என்று அது பொருள்படாது.
இன்று இது போன்ற எழுச்சியை ஏற்படுத்தும் சக்தி பகுதியாக ஊடகங்கள் கையில் உள்ளது. அதனால் பல பாரிய மாற்றங்களைக் எற்படுத்த முடியும். ஆனால், பக்தர்கள் வேண்டுதல்களை அது நிறைவேற்றற் பாலற்றது. இதை அறிந்து ஊடகங்கள், திரைப்படங்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும்.
”மெய்ப்பொருள் காண்பதறிவு”


No comments:
Post a Comment