- வளர்ச்சியடைந்த நாடுகளில் தினம் பில்லியன் கணக்கில் பணம் அச்சிடப்பட்டுக் கொண்டே உள்ளது.
- இலங்கை தொடர்ச்சியாகக் கடன் வாங்கிக் கொண்டே உள்ளது.
- இலங்கையின் வெளிநாட்டு நாணய மாற்றுவீதம் அல்லது அந்நியச் செலாவணி வீழ்ந்து கொண்டே உள்ளது.
- உள்ளூர்ப் பொருளாதார வளர்ச்சிகள் ஏதும் இல்லாமலேயே, பயனற்ற பல அபிவிருத்தித் திட்டங்களை அரசு கடன் வாங்கி வாங்கி செய்துகொண்டே இருக்கிறது.
- இதிலே வெளிநாட்டு வர்த்தகம், நாணய மாற்றுவீதம், பொருளாதாரம், அந்நியச் செலாவணியில் ஊழல் நடந்து கொண்டே இருக்கிறது.
- இலங்கையிலுள்ள பொறுப்பற்ற, முட்டாள் பொருளாதாரவியலாளர்கள் அவ் ஊழல்களை இனம் காணமுடியாமல் அல்லது இனங்கண்டும் காணாதது போல இருக்கிறார்கள்.
- வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒருவருக்கு இலங்கை வழங்கும் கூலிகள் போல 10 மடங்கு கூலிகள் வழங்கப்படுகின்றன. இலங்கை போன்ற வளர்ச்சியடையாத நாடுகளில் உள்ளவர்களின் கடின உழைப்பினைச் சொகுசாக வளர்ச்சியடைந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றனர்.
- இலங்கை அரசோ திரைசேரி தீர்ந்து விடுவதாகக் கூறி அடிக்கடி கடன் வாங்குவதில் குறியாக உள்ளது அல்லது வங்கிகளில் உள்ள மக்கள் பணத்தினை வாங்கி திரைசேரியை நிரப்பிக் கொள்கிறது அல்லது எப்போதும் மக்கள் அடிமையாக உள்ள துறைகளான தொலைத்தொடர்பு, வாகன வரி போன்றவற்றை உயர்த்துகிறது அல்லது பணத்தினை அச்சிடுகிறது. மீண்டும் இலங்கைப் பணத்தின் பெறுமதி வீழ்கிறது.
இலங்கைப் பிரஜை ஒவ்வொருவரும் அவருக்கே தெரியாமல் பல லட்சங்களைக் கடன் சுமையாக மேற்கூறிய வடிவங்களில் சுமந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இது ஒரு பின் தங்கிய நாடு; உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்க இயலாத நாடு; தன் உழைப்பினை வளர்ச்சியடைந்த நாடுகளுக்குத் தாரை வார்க்கின்ற நாடு; புத்தி இல்லாதவர்களின் உழைப்பை புத்தி உள்ளவர்கள் பல வகையில் கொள்ளையிட்டுச் சொகுசு வாழ்க்கை வாழும் நாடு; நாட்டையே கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் வாழும் நாடு, கடன் சுமை நிறைந்த நாடு.
புத்தியில்லாத நான்கு இனங்கள், இந்த நாட்டினிலே உள்ள வளங்களை மட்டும் கருத்தில் கொண்டு (சுரண்டுவதற்காக), இப்படிப்பட்ட நாட்டில் உரிமை கோரிக் கொண்டு, அந்தக் கடன் சுமையில் எனக்கும் கொஞ்சம் தா! எனக்கும் நாட்டின் சொத்துக்களில் உரிமை உண்டு. எனக்கும் அதிகாரம் வேண்டும் என்று சண்டை செய்து கொண்டு இருக்கின்றன. இதில் என்ன கொடுமை என்றால் தமிழினமோ தன்னை அழிப்பதற்காக வாங்கப்பட்ட கடன்களையும் தானே தீர்ப்பேன் என்று கங்கணம் கட்டுகிறது. இவை அனைத்தையும் நன்கு கவனித்தால் சொத்துக்களையும் வளங்களையும் உள்ளிருந்து பார்க்கும் குருட்டுக் கூட்டம் அதற்காகச் சண்டை செய்யலாம். ஆனால், இது ஒரு சபிக்கப்பட்ட நாடு ஆகும். உண்மையில், எனக்கு இந்தக் கடன் வேண்டாம் நீயே பாதிப் பொறுப்பை ஏற்றுக்கொள் என்று புறந் தள்ளப்பட வேண்டிய நாடு இது.
சுயநலவாதம் பாராட்டும், குறுகியகால மகிழ்ச்சியான வாழ்க்கையில் மட்டும் லயித்து இருக்கின்ற இந்நாட்டுப் பிரஜைகளுக்கு அது புரியாது. இல்லை, பிரஜைகள் என்று ஒட்டு மொத்தமாக எல்லோரையும் நான் குற்றம் சொல்ல மாட்டேன். உண்மையில் கீழ்மட்டங்களில் வேலை செய்யும் சிங்களத் தொளிலாளர்கள் பற்றி நான் அதிகம் கவலை கொள்கிறேன். அவர்கள் வேலைகள் மிக நேர்த்தியானவை. ஆனால், அதற்கான ஊதியம் மிகக் குறைவு. உதாரணத்திற்கு, கடின உழைப்பினை வழங்கும் ஒரு சிங்கள மேசன் பெறும் கூலி ரூபா 1200 ஆகும். ஆனால், இங்கு தமிழ் பிரதேசங்களில் பெரும் சிரத்தை இன்றி வேலை செய்யும் மேசன் பெறும் கூலி ரூபா 1500 ஆகும். இன்னும் பல இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இதனை நான் பலரிடமும் ஆலோசித்துள்ளேன். அவர்கள் கூறியவை சில... ரயில்பாதை ஓரங்கள், தாழ்வான பகுதிகள் போன்ற இடங்களில் காணப்படும் சிங்களவர்களின் அத்திவாரமே இல்லாத, தாழ்வான வீடுகளைப் பார்க்கும்போது பெரிதும் மனவருத்தமாக இருந்ததாகப் பலர் கூறி இருக்கின்றனர். எத்தனையோ இடங்களில் அடிக்கடி மண்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பல பொருட் சேதங்களும் பல உயிர்ச் சேதங்களும் ஏற்படுகின்றன. ஆனால் அவற்றை அரசு கண்டும் காணாமல் விடுவதாகவும் நகரப் புறங்களையே அடிக்கடி கடன்கள் வாங்கி அபிவிருத்தி செய்வதாகவும் கூறியிருக்கின்றனர். ஒரு பக்கம் ஒரு அரசு கடன் வாங்கி தாமரைக் கோபுரம் அமைக்கிறது. இன்னொரு பக்கம் இன்னொரு அரசு கடன் வாங்கிக் கடலிலே மண்போட்டு சிங்கப்பூர் அமைக்கிறது. இவை எல்லாம் நாட்டின் உண்மையாக அபிவிருத்திக்காக அவர்களே தொடங்கியவை அல்ல. பல பழைய கடன்களின் அழுத்தம் மற்றும் பல உள்நோக்கங்களுக்காகவே அத்திட்டங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
வாங்கப்படும் கடன்கள், இலங்கை ஈட்டும் பொருளாதாரம் தமிழர்களிற்கும் கிட்டுவதில்லை; சிங்கள மக்களுக்கும் கிட்டுவதில்லை. எனில் அது எங்கே போகிறது. இடையிலுள்ள முதலைகள் அவற்றைச் சாப்பிட்டுவிடுகின்றன. அரசியல்வாதிகள், தரகர்கள், இறக்குமதியாளர்கள், வெளிநாட்டவரிடம் ஊதியம் பெற்று நாட்டையும் நாட்டின் வளங்களையும் விற்பவர்கள் மற்றும் காட்டிக் கொடுப்பவர்கள் என இந்த முதலைகள் பல வகைப்படுகின்றன.
ஏன் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்த நாடுகள் கடன்களை வாரிக் கொடுத்துக் கொண்டே உள்ளன? அதற்கும் காரணம் அதுதான், அதிக கடனினை ஒரு நாடு கொண்டிருக்கும்போது அதனால் மீண்டு வரவே இயலாது. அந்நாடு தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வரும் நாடாகவே இருக்கும். அப்போதுதான் அந்த வளர்ச்சியடைந்த அதனால் கிட்டும் அனுகூலங்களை அனுபவிக்க முடியும். கடனாக அவர்கள் கொடுப்பதில் பெரும்பகுதி இங்கேயே ஈட்டப்பட்டவையாகத்தான் இருக்கும்.
இவற்றையெல்லாம் அறிந்து கொள்வதற்கு மட்டுமே எனக்கு அறிவு போதுமாக இருந்தது. அன்றி, இவற்றை எல்லாம் தீர்க்கும் அறிவு எனக்கு இல்லை. அதற்கான துறையும் என்னுடையதல்ல. ஆனால், ஒரு பிரஜையாக அந்தப் பொறுப்பில் சிறுபங்கு என்னுடையது. நாளாந்தம் பத்திரிகை கூட ஒழுங்காக வாசிக்காத நான் அறிந்தவையே இத்தனை என்றால், இவை தவிர நான் அறியாத எத்தனையோ கதைகள் இருக்கிறது. தெற்கில் முஸ்லிம்கள் வாழும் பகுதி எப்படி இருக்கிறது மற்றும் அவர்கள் அனிபவிக்கும் கஸ்டங்கள் எத்தனை என்று நான் பார்த்தது கூட இல்லை. என்னுடைய சொந்த இடமான வடக்கில் கூட நான் சொற்ப இடன்களையே பார்வையிட்டிருக்கிறேன். இப்படி வடக்கிலிருந்து தலைநகர் கொழும்பு செல்லும் பாதையுடன் கொழும்பு, கதிர்காமம், மன்னார் (திருக்கேதீச்சரம்) வவுனியா தவிர ஏனைய இடங்களை நான் உதாரணத்திற்குக் கூடப் பார்த்தது கிடையாது.
இப்படி எல்லாம் இருக்க, ஒரு புத்தியுள்ளவரின் தெரிவு யாதாக இருக்கும் எனில் எப்படியாவது தன்னுடைய தகமைகளை வளர்த்துக் கொண்டு பிறிதொரு வளர்ச்சியடைந்த நாட்டில் போய் குடியேறுவதாகவே இருக்கும். ஆகக் குறைந்தது அவுதிரேலியா இற்காவது சென்று இந்தக் கடன் சுமைகளில் இருந்து தப்பி விட வேண்டும். கடன் சுமை என்றால் அது உள்நாடு வாங்கிய கடன் மட்டுமல்ல, வளர்ச்சியடைந்த நாடுகளால் தமது சொகுசுக்காகத் திணிக்கப்படும் பல சுமைகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
இப்படி இருக்க இலங்கை அரசு ஒண்டும் இந்தச் சுமைகளைத் திணிப்பதில் குறைந்தது அல்ல. இங்குள்ள சிறுபான்மைகள் இங்கு வாழப் பூரண சுயந்திரம் கிடையாது என்று வெளிப்படையாக சட்டபூர்வமாக அறிவித்தால் அவர்கள் சென்று குடிபுகுவதற்கு கை நீட்ட எத்தனையோ நாடுகள் தயாராக உள்ளன. ஆனால், அப்படி இங்கு எந்த அறிவிப்பும் கிடையாது. ஆனால் எல்லாம் உட் குடைச்சல்களாக இருந்துகொண்டே இருக்கின்றன. தப்பித்துப் போகவும் முடியாது. நிம்மதியாக வாழவும் முடியாது. அவர்கள் அதிகாரத்தைக் கூடப் பிரித்துத் தர முடியாது என்று கூறியபோதே எல்லாம் வெளிச்சம் ஆகிவிட்டது, இவர்கள் சிறுபான்மையினரை அடிமையாக்கி அவர்தம் உழைப்பைச் சுரண்டுவதற்கே அவர்களை இன்னமும் விட்டு வைத்திருக்கின்றனர் என்பது.
சிறுபான்மையினருக்கு உரிமை வேண்டாம், அதிகாரம் வேண்டாம். அவர்தம் தலையில் கடன் சுமை வேண்டும். அவர்தம் உழைப்பு வேண்டும். வெளிநாட்டில் இருந்து அவர்கள் சார்பாக வரும் அந்நியச் செலாவணி வேண்டும். பிறகு எல்லோருக்கும் சம உரிமை என்று பறைசாற்றிக் கொள்வது. ஆனால், வெளிவரும் அரச கட்டளைகள் யாவும் சிங்களத்தில் மட்டுமே வெளியாகின்றன. தேரர்கள் சிலர் சிங்கள பௌத்த நாடு என்று கூவுகின்றனர். பிறகு சிறுபான்மையினர் யார். அவர்களை இன்னமும் ஏன் வைத்திருக்கின்றனர். இது ஒரு ஜனநாயக சோசலிசக் குடியரசு நாடு என்பதைச் சொல்லக் கேட்டால் கூச்சமாக இருக்கிறது.
இந்தப் பழி என்பதை அப்படியே தூக்கி சிங்கள மக்கள் தலையில் போட்டுவிட நான் ஒன்றும் அறிவற்றவன் அல்ல. இப்படி என்றால் என்னவென்றே தெரியாமல் அன்றாடக் கடமைகள் செய்யும் சிங்கள மக்கள்தான் பெரும்பான்மையானவர்கள். ஆனால் இனம் என்று குரல் கொடுத்தால் ஓடி வந்து குடை பிடிக்கும் முட்டாள்களாக அவர்கள் வளர்க்கப்பட்டு இருக்கின்றனர். சில இனவாதம் பிடித்த, இனத்தை வைத்து தமது அரசியல்களைக் கட்சிதமாக முடித்துக் கொள்பவர்கள் எண்ணம் இதுதான். அவர்களுக்கு தாங்கள் முதன்மை வகிக்க வேண்டும். தாங்கள் முதன்மை வகிக்க வேண்டும் எனில் தாங்கள் மட்டும் இருந்து என்ன பயன். அவர்கள் போடும் கூத்தைப் பார்த்துப் பாராட்டுவதற்காகவே சிறுபான்மையினரை விட்டு வைத்திருக்கின்றனர்.
இலங்கையில் இலவசக் கல்வியின் நிலை என்ன? இலங்கையில் வழங்கப்படும் இலவசக் கல்வியை அனைவரும் மெச்சுகின்றனர். என்னுடைய பார்வையில் அது முற்றிலும் மாணவர்களை பலவீனமாக்குகின்றது. வெளிநாடுகளில் உள்ள இளைஞர், யுவதிகள் குறைந்த வயதில் #தேவையான தொழிற் கற்கையைப் பூர்த்தி செய்து வேலை செய்யத் தொடங்கிவிடுகின்றனர். தனியாரில் குறைந்த வயதில் முடிக்கக் கூடிய பட்டப் படிப்புகள் இழுத்தடிக்கப்படுகின்றன. மனிதனின் அதிக ஆக்க பூர்பமான சிந்தனைக் காலங்கள் யாவும் பல்கலைக் கழகங்களில் வீணடிக்கப்படுகின்றன. இந்த முறைக்கும் காரணமும் அந்நிய நாட்டவர்தான். இலங்கை ஏன் இன்னும் வளர்ச்சியடையவில்லை என்பது பற்றி இன்னொரு பதிவு செய்துள்ளேன். அதோடு, சிறு வயது முதல் கற்ற கல்வி எத்தனை வீதம் சராசரி வாழ்வில் பயன்படுத்தப்படுகிறது என்றால் மிகவும் சொற்பமே. பிரயோகக் கல்வியை மேம்படுத்தாமல் எப்படி ஒரு நாடு வளர்ச்சியடைய முடியும்.
இலவசமாகக் கிடைப்பதால் கல்வியின் மதிப்பு அனைத்து மாணவர்களுக்கும் விளங்குவதில்லை. அதன் தேவை என்ன என்பதை மறந்து வெறுமனே கடமை நிமித்தம் பாடசாலை செல்கிறார்கள். அக் கல்வி எந்தப் பயனும் இல்லாமல் காற்றோடு காறாகப் போகின்றது. இலவசக் கல்வி நிறுத்தப்பட்டு, நல்ல புள்ளி வாங்கும் பிள்ளைகளுக்கும் நல்ல செயல்திறன் உள்ள பிள்ளைகளுக்கும் 100% வரை புலமைப்பரிசில் வழங்குதல் இதனைத் தவிர்க்க உதவும். அப்போதுதான் அதற்கு இது போன்ற கோமாளித்தனமான போட்டி இருக்காது; இலவசக்கல்வி என்ற இவர்கள் போடும் ஆட்டமும் அடங்கும்; படிக்கும் பிள்ளைகள் தொல்லைகள் இன்றிச் சுதந்திரமாகப் படிக்கவும் முடியும்; படிப்பின் அருமையும் மாணவர்களுக்குப் புரியும். ஆனால், எத்தனையோ வீணான திட்டங்களுக்கு செலவு செய்யும் நிதியைவிட இலவசக் கல்விக்கான நிதி புறக்கணிக்கத்தக்கது என்று சிலர் வாதிடுகின்றனர். அதுவும் ஒரு வகையில் உண்மையே! ஆனால் பாடத் திட்டங்களை மாற்றுதல் மிக அவசியம், என்பதை யாரும் மறுக்க முடியாது.
நான் ஒரு மொரட்டுவப் பல்கலைக் கழகப் பொறியியல் பீட மாணவன். நான் இந்த நாட்டின் மீது மிகுந்த அக்கறை கொண்டவனாக இருந்தேன். என்னுடைய ஒவ்வொரு பார்வையிலும் இந்த நாட்டின் வளர்ச்சியை எப்படி மேம்படுத்துவது என்பதும் ஒரு எண்ணமாக இருந்து வந்தது. தன்னிறைவை இந்த நாடு அடைய முடியாமை குறித்தும் வருத்தமாக இருந்தது. இதே நாட்டில் இலவசக் கல்வியில் கற்றவன்; கற்பவன். அந்தக் கடன்கள் யாவும் எனக்கு ஒரு சுமையாகவே இருந்து வந்தது. பிறகு அனைத்தும் எனக்குத் தெளிந்து கொண்டது. இந்த நாட்டிலேயே உழைத்து நான் நினைத்த அளவிற்கு முன்னேற முடியாது என்பது எனது எண்ணமாகும். அதற்குக் காரணம், இந்த நாடு வளர்ச்சியடைந்து வரும் நாடு, இங்கேயும் அதுதான் இடிக்கிறது. அதனால், வெளிநாடு சென்று உழைத்தால் 10 மடங்கு கூலி தருவார்கள். அதனில் சற்றுச் சேமித்து இங்கே அனுப்பினால் அப்போதும் அந்த கல்வி கற்ற கடன் தீரும் என்பது எனது எண்ணமாக இருந்தது. காரணம், வெளிநாட்டுப் பணம் உள்ளே வரும்போது அந்நியச் செலாவணி வருகிறது அல்லவா. ஒருபோது முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச வெளிநாட்டில் இருந்து உள்நாட்டிற்குப் பணம் அனுப்பவர்கள், பொன் முட்டை இடும் வாத்துகள் என ஒரு ஊடக நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
பின்னாளில் எனது எண்ணமும் பிழையாகிவிட்டது. நான் கற்பது பொறியியலில் மென்பொருள் துறை. இதில் அநேகம் வளர்ச்சியடைந்த நாட்டு மென்பொருள் நிறுவனங்களே தமது தேவைகளை இலங்கையில், குறைந்த ஊழியத்தில் செய்து கொள்கிறார்கள். இதனால், வளர்ச்சியடைந்த நாடுகளில் பலர் வேலைவாய்ப்பை இழந்து, தமது வேலைகளைக் கீழைத்தேய நாடுகளுக்குத் தர வேண்டாம் எனப் போராடுவதான செய்திகளை நான் பார்த்திருக்கிறேன். அதிலும் ஊழல்தான் நடக்கிறது இங்கே. சராசரியாக ஒரு பொறியாளனுக்கு இங்கே வழங்கப்படும் ஊதியம் 1.5 லட்சம் ரூபா(குறைந்தது 80,000 முதல் கூடியது 8,9 லட்சங்கள்) என்று இருந்தால், அந்த வேலையைச் செய்து கொடுப்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து 4 லட்சம் ரூபா வரை பெறப்படுகின்றது. எனவே நாட்டுக்குள் 4 இலட்சம் ரூபா வந்து விட்டால், அதற்கான அந்நியச் செலாவணியை நாம் நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்து விட்டோம்.
இதனால்தான் ஏனைய பொறியியல் துறைகள் போலல்லாது மென்பொருள் துறை இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமான பங்கு வகிக்கிறது. ஆனால், நமக்குச் சராசரியாக 1.5 இலட்சம் ரூபாயை வழங்கப்படுகிறது. மீதிப் பணத்திற்கு என்ன நிகழ்கிறது. அத்தனையும் கொள்ளைதான். பிறகு, மென்பொறியாளர்களை வெளிநாட்டுக்குச் செல்லவிடாமல் பல மறைமுகத் தடுப்புகள் ஏன்? அங்கு செல்பவர்கள், தமது உறவுகளுக்குப் பணம் அனுப்புவார்கள் அல்லவா? இங்குதான் சிக்கல் இருக்கிறது. ஒருவருக்கு சிங்கப்பூரில் 8 லட்சம் ரூபா ஊதியம் அளிக்கப்பட்டால், அவர் தன் வாழ்க்கைச் செலவுகள் போக 2.5 இலட்சம் ரூபாயை இலங்கைக்கு அனுப்ப இயலும் என்பது என் கணிப்பு. அது 1.5 இலட்சங்களை விட அதிகமாயிற்றே. ஆனால், அதனால் அந்நியச் செலாவணியில் வருவாயில் 1.5 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்படுகிறதே!
இப்போது புரிகிறதா? இன்னமும் ஏன் சிறுபான்மையினருக்கு இன்னமும் இங்கே உரிமை, அதிகாரம் வழங்காவிடிலும் வைத்திருக்கிறார்கள் என்று. உள்ளே இருந்து பார்த்தால் எதுவும் புரியாது. சற்று வெளியே வந்து ஜோசித்துப் பார்த்தால் நான் கூறியவற்றில் உள்ள அனைத்து உண்மைகளும் தெரியும். இங்குள்ள சிறுபான்மை மக்களில் 40 வீதமானவர்களிற்கு தமது சொத்துக்களை விற்றால், முகவர் நிறுவனங்கள் மூலம் அவுஸ்ரேலியாவிற்குச் செல்வதற்கான பணம் கூடக் கிடைத்துவிடும். இங்குள்ள மக்களை அகதியாக அரசு அறிவித்தால் விமானச் சீட்டுப் போதும், நண்பர்கள் உறவுகள் என்று அனைவருமே இடம் மாற இயலும். ஆனால் அப்படி ஒரு சம்பவம் ஒரு நாளும் நடக்காது. சிறுபான்மையினர் மீதும் #கூட அந்தக் கடன் சுமை திணிக்கப்பட்டுத்தான் இருக்கிறது. இந்த நாட்டின் கீழ்நிலை மக்கள் அடிமை போல, மேல்நிலையில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்காக தமது உடல் உழைப்பை வழங்குவதற்குரியவர்கள்.
யப்பானியத் தொழிலதிபர் ஒரு யூ டியூப் காணொலியில் தெரிவித்திருந்தார். கல்வி கூடங்களில் வேலைகளைச் செய்து ஊதியம் பெறுவதற்கே சொல்லித் தரப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல்தான் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு நிதிசார் கல்விகள் சொல்லித் தரப்படுவதில்லை; மறைக்கப்படுகின்றன. அல்லாவிடில் அந்தத் தொழில்களைச் செய்வதற்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள். இன்னொன்றும் சொன்னார், நீங்கள் பணத்தைச் சேமித்துப் பயனில்லை. பணவீக்கத்தைச் சமாளிப்பதற்காக, தினமும் கோடிக்கணக்கில் பணம் அச்சிடப்படுகிறது. அதன் மதிப்புக் குறைந்து கொண்டே போகிறது. இதனுடன் ஒப்புடுகையில் வங்கிகளில் உங்களுக்கு வழங்கப்படும் வட்டி மிகக் குறைவு. உங்கள் சேமிப்பு வீணானது. நிதிசார் தொழில் புரிபவர்கள் இந்த உண்மை நன்கு தெரியும். அவர்கள் முதலீடுகள் மூலம் வரி செலுத்தாத பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் பண ஓட்டத்தை நன்கு அறிந்து, ஏனையோரை அறியாமையில் வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்.
ஆக இதற்கு என்ன வழி, என்னதான் செய்ய என்று கேட்டால் என்னுடைய ஆலோசனை இதுவாகத்தான் இருக்கும். கோடிக்கணக்கில் இலங்கையில் முதலீடு செய்யும் தொழிலதிபர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். இனியும் இங்கு எதுவும் செல்லாது. அந்தக் காசுகளைக் கொண்டு வளர்ச்சியடைந்த நாடுகளிற்குப் புலம் பெயர்ந்து செல்க. முடிந்தால் அங்கு முதலீடு செய்க. உங்கள் உறவுகள், நண்பர்களையும் அங்கே வரவளைத்துக் கொள்க. இக்காலங்களில் இங்கே ஒரு வீடு கட்ட குறைந்தது 30 லட்சங்கள் தேவைப் படுகின்றன. இந்த நாட்டிற்கு உள்ளேதான் உங்கள் காணிகளுக்கு மதிப்பு, விலை எல்லாம். தொலை நோக்கில் பார்த்தால் இது ஒரு சபிக்கப்பட்ட கடன் பூமி. அதில் நீங்கள் கொண்டுள்ள ஒவ்வொரு நிலத்துண்டுகளும் ஒவ்வொரு சொத்துக்களும் உங்கள் மேலே கடன் சுமைகளையும் வெளிநாட்டவர் சொகுசு காரணமான சுமைகளையும் உங்கள் மீது திணிக்கும். முடிந்தால் அவற்றை விற்று விட்டு வரும் பணத்தைக் கொண்டு வளர்ச்சியடைந்த நாடுகளிற்குத் தப்பித்துச் செல்க.

No comments:
Post a Comment