![]() |
| thanks: sial.school |
"அதிஷ்டத்திற்காகத்தான் காத்திருக்க வேண்டும், கடின உழைப்புக்காக அல்ல. உங்கள் #மதியால், உங்கள் #உழைப்பால் வரும் விளைவை அதிஷ்டம் எதுவும் செய்ய முடியாது. ஏன் கர்மாவும்கூட ஒன்றும் செய்துவிட முடியாது."
நாம் யாரிற்கும் தீங்கின்றி நேர்மையாக வாழ்ந்தாலும் பல பிரச்சினைகள் அறியாமல் வந்து ஒட்டிக் கொள்வது ஏன்?
நாம் ஒவ்வொரு இடங்களுக்குச் செல்லும் போது, ஒவ்வொரு நிகழ்வுகளில் பங்கு கொள்ளும்போது அடுத்தவர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கின்றோம். இந்த உலகில் பெறுமதி உள்ள பொருட்கள் அனைத்திற்கும் கேள்வி அதிகம் உண்டு. ஆனால் இருப்பு குறைவாகவே உள்ளது. அதனாலேயே அவை பெறுமதி உடையவையாக உள்ளன.
ஆகையால், வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் சவால்களாகவே இருக்கும். பிரச்சினைகளைச் சந்திக்காமல் வாழ விரும்பினால் அதற்கு ஒரே வழி எங்கும் செல்லாமல், எதிலும் பங்கு கொள்ளாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியதுதான். பிறகு என்ன செய்ய? பிரச்சினைகளையும் தடைகளையும் தாண்டி உங்கள் பயணம் தொடர வேண்டும். "தடையைத் தாண்டி நீ நடையைப் போடுடா! வாழ்க்கை முழுக்க இருக்கு ஜோருடா!" பல தோல்விகள் வரினும் இலக்கை நோக்கிய உங்கள் ஓட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். "நதி போல ஓடிக் கொண்டிரு!", "ஓடும் வரையில் வெற்றி நமக்கு ஓடுதல் நிறுத்தாதே!" உண்மையில் இது இரு பொருள் கொண்டுதான் கவிஞர் எழுதி இருக்க வேண்டும். அது குறித்து பிறிதொரு பதிவில் பார்ப்போம்.
மிரட்டல்கள் செய்து ஏமாற்றும் கயவர் கூட்டம்
இந்த உலகில் அநேக செயற்பாடுகள் மிரட்டல்கள் மூலமாகவே நிறைவேற்றப்படுகிறது. அனைவருமே ஏதாவது ஒரு வகையில் மிரட்டலுகளுக்கு உள்ளாகி இருப்பார். பலரும் இன்னமும் மிரட்டல்களின் பிடியிலேயே செயற்படுகின்றன. அவை வெளியில் சொல்ல முடியாதவையாக இருக்கலாம். சொத்துக்களை ஏமாற்றி அபகரிப்பதற்கு அன்று தொட்டுக் கையாளப்படும் முறைகளில் இதுவும் ஒன்று. முதலில் உங்களை ஏதாவது தவறு செய்ய வைப்பர். அதற்கான சூழல்களை ஏற்படுத்துவர். பிறகு அதனை சாட்சிப்படுத்தி வெளிப்படுத்தி விடுவேன் என மிரட்டுவர். அநேகமாக அவை மானத்திற்குப் பங்கம் விளைவிக்கும் தவறுகளாக இருப்பதே வழக்கம். உ.ம்: மது, மாது, களவு இன்னும் பல... இதனை எச்சக்களை நாய்கள் என்று அழைப்பர்.
"திருடனுக்குத் தேள் கொட்டினால் பேசாமல் இருக்க வேண்டும்" அல்லவா!
இது போன்ற சவால்களிலிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. தவறு செய்வதற்குச் சந்தர்ப்பம் இடங் கொடுத்தாலும் தவறுகள் செய்யக் கூடாது. எப்போதுமே நேர்மையாகவே நடக்க வேண்டும். அதோடு அது போன்ற மிரட்டல்களிற்கு அடி பணியவே கூடாது. குறுகிய கால விளைவை சிந்திப்பதை விடுத்து நீண்ட காலத்துக்குச் சிந்திக்க வேண்டும். நீங்கள் செய்யும் செயற்பாடுகளின் விளைவுகள் தெரியாதவிடத்து அவற்றைச் செய்யவே கூடாது. அந்தச் செயற்பாடுகள் பலரின் உயிரைக்கூடக் குடிக்கலாம். அத்துடன் ஒரு போதும் நிதானத்தை இழந்துவிடக் கூடாது.
வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றுவதும் இரண்டாவது பிரபல்யமான ஏமாற்றுமுறை ஆகும். அதனிலிருந்தும் கவனமாக இருக்க வேண்டும்.
நவீன முறைத் சித்திரவதை முறைகளைக் கண்டுபிடிக்க முடியாதது ஏன்?
தவறு செய்பவர்கள் ஒரே முறையினையே தொடர்ந்து பின்பற்றினால் மாட்டிக் கொள்வர். அதனால், அதையே தடையின்றி தொடர்ச்சியாகச் செய்ய #ஒரே #மாதிரியான #விளைவுகளுடைய, அதனை ஒத்த பல திட்டங்கள் வைத்திருப்பர். அதனை மாற்றி மாற்றி செயல்படுத்துவர். ஒவ்வொரு முறையிலும் பல மாற்றங்கள் இருக்கும். இதனால், அது எங்கிருந்து செய்யப்படுகிறது, அதற்குப் பயன்படுத்திய உத்தி என்ன, செய்பவர் யார் போன்றவற்றைக் கண்டுபிடிப்பது கடினம். அதனால் அவர்கள் வெளிப்படையாகவே நடமாடக் கூடியதாக உள்ளது.
இவ்வாறான சவால்களை முறியடித்து வாழ்வில் வெற்றி அடைவது எப்படி?
நீங்கள் எங்கே சென்றாலும் என்ன செய்தாலும், உங்களது வீட்டுடனான உறவு மட்டும் வலுவாக இருக்க வேண்டும். உங்கள் நலனுக்காகக் குரல் கொடுக்க ஒரு கூட்டம் இருக்க வேண்டும். அது நண்பர் கூட்டமாகக் கூட இருக்கலாம். இலக்குகளை வரையறுத்து அதை நோக்கித் தினம் ஒரு அடியாவது எடுத்து வைக்க வேண்டும். ஒன்றை அடைவதற்காக இன்னொன்றை கடமையாகச் செய்பவர்கள் விரைவில் அதன் மீதும் வாழ்க்கையின் மீதும் வெறுப்படைகிறார்கள். இலக்குகளை வைத்து அதை நோக்கி அதையே முழுமூச்சாகச் செய்பவர்கள் அதிலே மேலும் நாட்டம் கொண்டு வெற்றியடைகிறார்கள். எத்தனை தோல்விகள் வரினும் துவண்டுவிடக் கூடாது.
எல்லோரும் போல சுலபமான பாதையைத் தெரிவு செய்யாது, வித்தியாசமான பாதையைத் தேர்ந்தெடுங்கள். எது வந்த போதும் அதிலேயே நிலைத்து இருங்கள். ஆனால் நீங்கள் தனித்து விடவில்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். தடைகள் இல்லாத பாதையில் செல்ல நினைப்பதைவிட, தடைகளைத் தகர்க்க, தவிர்க்க, தாங்கிக் கொள்ளக் கற்றிருத்தல் வேண்டும். தடைகளின்றிப் பாதைகளே கிடையாது.
வாய்ப்புகள் எப்போது கிட்டாது; உங்களுக்காகக் காத்திருக்கப் போவதுமில்லை
உழைப்பால் உயர்ந்த காலம் கற்காலம். இப்போது வாழ்க்கை ஒரு சூதாட்டம், அதிலும் தர்மம், அதர்மம் உண்டு. உடையவற்றை உடையவரே நம்பும் வகையில் ஏமாற்றியே இங்கே அநேக பணம், பொருள் ஈட்டப்படுகிறது. எங்களால் முடிந்தவரை நம் இருப்பை உறுதிப்படுத்துவதிலேயே மக்கள் நாட்டம் செல்கிறது.
உதாரணமாக, எத்தனை இலட்சங்கள் ஊதியம் பெறுபவராக இருப்பினும் ஒருவர் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகையில் மிகுதியையும் கேட்டுப் பெற மறப்பதில்லை. அவர் நின்று பயணம் செய்தாலும் இருந்து பயணம் செய்தாலும் அதே அளவு பணம்தான் அறவிடப்படுவார். ஆனால், அவர் ஒரு தனிப்பட்ட வாடகை வண்டியில் சென்றால் அது போல் பல மடங்கு பணம் கொடுத்தே தீர வேண்டும்; கொடுக்கின்றார். முந்திக் கொள்பவர்கள் இருக்கைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். எப்போதும் வாய்ப்புகள் வருவதில்லை. அத்தோடு வரும் வாய்ப்புகளின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டதே! முந்திக் கொள்பவர் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வர். வருகின்ற வாய்ப்புகள் உங்களது விருப்பம் அல்ல எனில் ஒதுங்கி நிற்கலாம். ஆனால் எதுவும் இங்கே உங்களுக்காகக் காத்திருக்கப் போவதில்லை.
உங்கள் கைமீறிப்போன விடயங்களைக் கடந்து செல்வது மேல்
உங்களுக்கு நடந்த அநியாயங்களைச் சொன்னால், அதனால் பாதிக்கப்பட்டவர் தவிர ஏனையவர் அனுதாபம்தான் கொள்வரே தவிர எதுவும் மாறிவிடப் போவதில்லை. அவற்றைப் பறைசாற்றித் திரிவது வீணானது. அவற்றை நினைத்து வருந்துதல் உங்களை மேலும் கீழே கொண்டு செல்லும். ஏனெனில், கவலை வாழ்க்கைக்கு அனைத்து வகையிலும் எதிரி ஆகும். அதற்கான நியாயத்தினை உங்களால் வழங்க முடியாவிடின், அதனை உங்கள் கட்டுக்குள் கொண்டு வர முடியாவிடின் அவற்றைக் கடந்து செல்வதே மேலானது. அது உங்கள் மேலதிக இழப்புகள் ஏற்படாமல் தடுப்பதோடு உங்களது முன்னேற்றத்திற்கும் தடையாக நிற்காது.
இந்த உலகில் எவை எல்லாம் நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அவை எல்லாம் கண்டிப்பாக நடந்தே தீரும். ஆகையால் இதுவரை நடந்த, இப்போது நடைபெறுகிற விடயங்களை நினைத்து மனதைக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஒரு சில விசமக் குணம் படைத்தவர்களைப் பார்த்து எல்லோரையும் அவ்வாறுதான் என்று எடை போடாதீர்கள். அது உங்களுக்கு வாழ்க்கை மீதான வெறுப்பை ஏற்படுத்தும். நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு. அவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
கிடைக்கிறது கிடைக்காமலிருக்காது.
கிடைக்காமலிருக்கிறது கிடைக்காது.
எவை நமக்குக் கிடைக்க வேண்டும் என்று இருக்கிறதோ அவை மட்டுமே கிடைக்கும். “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” ஆகும்.
ஆனால், அவை கிடைப்பதில் முயற்சிக்கும் பங்கு உண்டு!
இந்த உலகில் இலட்சியமாக வாழ்வது கடினம்
குழப்பம் விளைவித்து வெற்றி கொள்ளும் இந்த உலகில் நடிக்காமல் நேர்மையாக வாழ்வது கடினம்.நேர்மையாக வாழ்ந்தால் சிலரின் நட்பைச் சம்பாதித்தாலும் பலரின் எதிர்ப்பைப் சந்திக்க வேண்டி வரும். இங்கே எல்லோரும் 100% நல்லவர்கள் அல்ல. உங்கள் நேர்மைக்காக அவர்களைக் காட்டிக் கொடுக்க வேண்டிய நிலைமைகள் பல வரும். அப்போது அது உங்களுக்குப் பல வகையில் தீங்கு பயக்கும். நீங்கள் உங்கள் கடமையில் மட்டும் நேர்மையாக இருத்தல் நலம்.
நடிக்காவிடில் கிடைக்க வேண்டிய பல கிடைக்காமல் போகும். நடித்தால் கிடாகாததது பலவும் கிடைக்கும். பிறகு சிறிய சிறிய துரோகங்கள் மறந்தும் போகின்றன. நேர்மையாக வாழ்வது என்று கூறி அனைத்தையும் இழக்கவா! அல்லது நடித்து அனைத்தையும் அனுபவித்து விட்டு மீண்டும் எதுவும் அறியாதது போல் நடிக்கவா ஒருவர் விளைவார்...
”உலகத்தோடு ஒத்து ஒழுகு”
குழப்பங்களிற்கு ஈடு கொடுக்க நீங்கள் கொடியவர்களாக மாறினாலும், உள்ளே எரிந்து கொண்டிருக்கும் நேர்மை எனும் நெருப்பை மட்டும் அணைய விட்டுவிடாதீர்கள்.
மெய்ப்பொருள் காண்பது அறிவு
நீங்கள் கேட்கும் பார்க்கும் அனைத்தையும் அப்படியே நம்பி விடாதீர்கள் சில சம்பவங்கள் ஒருவரைக் காரணம் வைத்துச் செய்யப்படுகின்றன. வெற்றுக் கண்ணால் பார்த்தால் அது தவறான ஒருவரையே குற்றவாளியாகக் காட்டும். நிதானமாகக் காத்திருந்து முடிவுகள் எடுப்பது அனைவருக்கும் சுபம்.
ஏன் என்று தெரியாமல் பல தாக்குதல்கள் நிகழும், இது குறித்துக் காரணம் தேடி நிற்கையில், "உன் கூட்டாளியை எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் தாக்கினேன்" என்று பதில் வரும். அத்துடன் அந்தக் கூட்டு முடிவடைகிறது. உன் கூட்டாளி கொள்கை உன் கொள்கை அல்லாதவிடத்து, அனுசரித்து நடக்க முடியாதவிடத்து தனித்திருப்பதே சுபம்.
கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு
காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு
கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி
குணத்துக்கு தேவை மனசாட்சி
தீயதைப் பாக்காதே!
தீயதைக் கேட்காதே!
தீயதைப் பேசாதே!
தீய எண்ணங்கள் உள்ளே போனால் திரும்பத் திரும்பத் தடக்கலுறும். தீயவனாக வாழாதவிடத்து, தீயவனாக மாறாவிடத்து அது துன்பமே விளைவிக்கும்
Everyday our life has something to attain our goals. Do them all and never quit. You will achieve it one day.

No comments:
Post a Comment