மனதை நெறிப்படுத்தும் மந்திர ஜெபமாலை
(2020 புரட்டாதி 16 இற்றைப்படுத்தப்பட்டது)
ஞானம் ஒன்றே என்றும் அளியாத மெய்ப்பொருள் ஆகும். முருகன் கையிலுள்ள வேலும் ஞானத்தின் பொருளையே குறித்து நிற்கிறது. ஞானத்தில் உளநலம் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகிறது. உடலை நோய்கள் பல பீடிப்பதைப் போலவே மனதினையும் நோய்கள் பீடிக்கின்றன. ஆனால் அவற்றை எளிதில் இனங்காண முடிவதில்லை. மனதை நெறிப்படுத்த ஆன்மீகம் பின்பற்றிய யுக்திகள் பல. உதாரணமாக, தொழுகை செய்தல், திருநீறு அணிதல், கோபுர தரிசனம், தோப்புக்கரணம் இன்னும் பல. அவற்றை நமது வாழ்வியலோடு இணைத்தே மதங்களும் சமயங்களும் தோன்றின. அவற்றுள் ஜெபம் செய்தலும் ஒன்று. பல குழப்பங்களிலிருந்து விடுபட்டு மனதை நெறிப்படுத்த ஜெபம் செய்தலும் ஒரு கருவியாக அமைகிறது.
நமது வாழ்க்கையில் பல வகையான குழப்பங்கள் வந்து சூழக் கூடும். நாம் அன்றாடம் சந்திக்கின்ற ஒவ்வொரு விடயங்களும் நமது அறிவிற்கு உரமாகும். அதிலே விசத் தன்மை கொண்ட மறைபொருட்கள் கலந்திருப்பின் அவையும் அழியாமல் அங்கேயே நிலைகொண்டுவிடும். எந்த ஒரு விடயமும் நமது மனதிற்குள் சென்று விட்டால், அவற்றை எளிதில் நீக்கிவிட முடியாது. தீயவையும் இதற்கு விதிவிலக்கல்ல. தீய எண்ணங்கள் நம் மனதில் விதைக்கப்பட்டால் அவை தோப்பாக மாறி, ஞான ஒளியை நம்மிடம் இருந்து மறைத்துவிடுகிறது. அவற்றை மறக்க நினைத்தால் அவை மேலும் வலுவாக வேரூன்றிவிடுகிறது.
ஜெபம் செய்தல் இது போன்ற தீய எண்ணங்களில் இருந்தும், இதுவரை நாம் செய்த பாவங்களில் (குற்ற உணர்ச்சி) இருந்தும் நம்மை விடுவிக்கிறது. அதோடு, மனதை ஒருமுகமாக வைத்திருக்கவும் இது உதவுகிறது. மனதில் பல மாறுபட்ட எண்ணங்கள் வராமல், நம்மைத் தெளிவித்து சரியான மார்க்கத்தை காட்டவல்லது. ஞாபக மறதி ஏற்படுத்தும் காரணிகளில் குழப்பமும் ஒன்று ஆகும். ஆகையால், இது மறதி எனும் நோயை விரட்டும் மருந்தும் ஆகும். இதன் தொழிற்பாடு முற்றிலுமாக உளவியலுடன் தொடர்புடையது.
இதனை அளவீட்டுடன் செய்வதற்காக ஜெபமாலை பயன்படுத்தப்படுகிறது. கண்ணை மூடிக்கொண்டு, ஒரு ஜெபமாலையைக் கையில் பிடித்து அதை எண்ணி எண்ணி ஒரே பொருளை மீண்டும் மீண்டும் உச்சரிப்பர். இந்த வழக்கம் அநேக மதங்களிலும் உள்ளது. கிறிஸ்தவர்கள் சிலுவை பொருந்திய மணிமாலையைப் பயன்படுத்தி மேரி மாதா அல்லது இயேசுவின் நாமம் ஜெபிப்பர். இஸ்லாம், பௌத்த மதங்களிலும் ஜெபம் செய்யும் வழக்கம் உண்டு.
இந்து மதத்தில் அநேகமாக 108 மணிகள் கொண்ட மாலை பயன்படுத்தப்படும். அதோடு இந்துக்கள் ”ஓம் - அஉம்” என்ற இந்த உலகம் தோன்றும்போது உருவான ஓசையையும் மந்திரத்தில் இணைத்து ஓதுவர். சுவாச வீதத்தைச் செம்மைப்படுத்த அது உதவுகிறது. விஷ்ணு பக்தர்கள் துளசி மாலை கொண்டு நாராயண நாமமும், சிவபக்தர்கள் உருத்திராட்ச மாலையும் வைத்து பஞ்சாட்சரமும் உச்சரிபர். சந்தன மாலை, ரத்த சந்தனமாலை, ஸ்படிக மாலை, ருத்திராட்ச மாலை, துளசி மாலை, செந்துளசி மாலை என இன்னும் பலவகை உண்டு.
இதன் பயனை மேலும் செம்மைப்படுத்த
- ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து,
- கண்களை மூடிக்கொண்டு,
- வேறு சிந்தனைகள் தவிர்த்து,
- கைகளில் சின் முத்திரை பிடித்து அல்லது ஜெபமாலையின் மணிகளை எண்ணிக்கொண்டு,
- ஏதாவது மனதிற்கு பரவசம் தரும் சிறு வசனங்களை
இதனையே சம்பந்தர், “விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்...” என்னும் பாடலில் பின்வருமாறு கூறுகின்றார். வான்வரை விறகுகள் அடுக்கப்பட்டு இருந்தாலும் அதனுள் புகுகின்ற சிறு கொடிய நெருப்பானது அவை அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்க வல்லது. அது போல நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் எரித்து அவற்றிலிருந்து நம்மை விடுவிப்பது “சிவாயநம” என்ற ஐந்தெழுத்தாகும் என்கிறார். “சிவாயநம” எனும் ஓசை மனதிற்கு அமைதியைத் தருவதாக சைவர்களால் உணரப்பட்டிருக்கிறது.

No comments:
Post a Comment