என் நண்பன் ஒருவன் என்னிடம் 'beef' கொத்து சாப்பிட்டு இருக்கிறாயா என்று சொல்லிக் கொண்டே தனது மதியச் சாப்பாட்டு முடிச்சை அவிழ்த்தான். நான் "இல்லையடா, நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை. பசுவைக் கொல்லுதல் பாவம்." என்றேன். பாவம் என்றால் என்ன? தனக்குத் தெரியாது. வரவிலக்கணம் கூறு என்று நக்கலாகக் கூறினான். நானோ இன்னொருவரோ இன்னொரு உயிரோ வருந்தும்படியாக நாம் என்ன செய்தாலும் அது தான் பாவம் என்றேன்." அதற்காகப் பாவம் என்றால் கருட புராணத்தில் கூறியது போல தண்டனைகள் எல்லாம் கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. விளங்கவில்லை. அதில் என்ன பாவம் என்றான். அதனால் எனக்கு எதுவும் ஆகாது என்றால் பிறகு பாவம் பற்றி ஏன் கவலை கொள்ள வேண்டும் என்றான்.
நீ இப்போது சாப்பிடுகிறாய். இன்னொரு உயிர், ஐயோ எனக்குச் தராமல் சாப்பிடுகிறானே என்று வருந்தினால் அது உனக்குப் பாவம் ஆகும் என்றேன். என்னதான் பாவத்தால் எதுவும் விளையாது எனினும், ஜீவகாருண்யம் என்று ஒன்று இருக்கின்றதல்லவா? நமக்கும் மனச்சாட்சி என்று ஒன்று இருக்கின்றதல்லவா? அதெப்படி நான் உழைக்கிறேன்; என் சாப்பாடு. சாப்பிடுகிறேன். இதில் அவனுக்கு நான் ஏன் தரவேண்டும். இதில் என்ன பாவம் என்றான்.
ஆம், கடினப்பட்டுத் தான் உழைக்கிறார்கள். இந்தப் பூமியில் நாம் அனைவரும் தோன்றினோம். வளங்களும் இயற்கையாகவே தோன்றின. அதில் அனைவருக்கும் சம உரிமை உண்டு. ஆனால், உழைப்பதாகச் சொல்பவர்கள் செய்வது என்ன. ஒரு நிலப்பரப்பைத் தமது வயல் எனப் பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். அதில் தமது உழைப்பைச் செய்தோ, வேலையாட்கள் வைத்தோ விவசாயத்திற்கு அதை ஏதுவாக மாற்றி அதில் விதைகளை விதைக்கிறார்கள். அதில் சூரிய ஒளி விழுகிறது. இப்புவியெங்கும் விழும் வெயிலில் அனைவருக்கும் தானே பங்கு உண்டு. அதன் துணை கொண்டு நெல் விளைகிறது. அதை விற்றுப் பணம் எடுத்துக் கொண்டு தமது உழைப்பு என்கிறார்கள். அதை வாங்கியவர்கள் அதைச் சமைத்து விற்கிறார்கள். இது போல ஏதோ ஒரு வகையில் அனைவருக்கும் சொந்தமானதை நீ ஏமாற்றி உனதாக்கிக் கொண்டு சம்பாதித்த பணத்தைக் கொண்டு நீ வாங்கிய உணவு இது. இதில் அனைவருக்கும் பங்கு உண்டு.
இந்த உணவு கிடைக்காமல் ஒரு உயிரோ, ஜீவனோ எங்கோ ஒரு மூலையில் ஏங்கினால் அது உனக்குப் பாவம் தான் என்றேன். ஆனால் எங்கோ உணவின்றித் துன்பப்படும் அனைத்து ஜீவன்களையும் உன்னால் கவனிக்கவோ அவற்றுக்குப் பசியாற்றவோ முடியாது. அதோடு அப்படி செய்யின், உன் கடமையையும் செய்ய முடியாது போய்விடும். எனவே "உன்னால் முடிந்த அளவுக்குக் அனைவருக்கும் கொடுத்துப் பகிர்ந்து உண்ண வேண்டும்" என்றேன். இதுதான் கடவுளுக்கும் மகிழ்ச்சி தரும். அவரின் படைப்பின் நோக்கமும் அதுவே என்றேன். கடவுளும் இதுவும் என்று சீறினான்... அப்படி ஏன் நான் செய்ய வேண்டும், என் உழைப்பில் நான் ஏன் தர வேண்டும். நான் என் உடல் உழைப்பால் பெற்றது அவை. இயேசு கூட உதவி என்று கேட்டு வந்தவர்க்கு தூண்டில் தான் கொடுத்தார். உழைத்துத்தான் இந்த உடலை ஜீவனம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியதாகச் சொன்னான்.
ஆம், நீ உழைத்தாய். உனக்கு அதற்கான சக்தி எப்படி வந்தது? நீ சாப்பிட்டாய். சாப்பாடு எப்படி வந்தது. அது அனைவருக்கும் சொந்தமானது, என்று கேட்க மறுடியும் அது உடல் உழைப்பு என ஆரம்பித்து விட்டான். நீ உன் உடலை உண்ட உணவினாலேயே பெற்றாய். இந்த உடல் உன் பிறப்பிற்கு முன், நீ உன் அம்மாவின் கருவில் தோன்ற முன் இருந்திருக்கவில்லை. ஆம், அது என் அம்மா, அப்பா உழைப்பு என மீண்டும்... ஹா... நீ ஒன்றும் இல்லாதவன். நீ இந்த உலகில் உதிக்க முன்னும் இந்த உடல் உன்னிடம் இல்லை. நீ மரித்த பின்னும் எரித்தாலோ புதைத்தாலோ எப்படியோ அந்த உடல் இந்தப் பூமியில் இடண்டறக்க கலந்துவிடும். ஏன் நீ இறந்த உடனேயே அது நீ சொல்வதைக் கேட்காது. அது உனக்குச் சொந்தமும் ஆகாது. நீ எதை எடுத்துக் கொண்டாயோ அது இங்கேயே எடுக்கப்பட்டது என்றேன்.
இது போலத்தான் எல்லாம். பிறக்கிறோம், உழைக்கிறோம் அது கொண்டு அனுபவிக்கிறோம் இது தானே கால ஓட்டத்தில் எழுதப்படாத விதி. அப்படி எனில் உழைப்பது எல்லாம் வீண்தானா என்று கேட்டான். இல்லை, இந்த உழைப்பின் ஒன்று மட்டும் உண்மை என்றேன். உழைப்பின்போது நீ அனுபவித்த வலியும் மன உழைச்சலும் மட்டும் உனக்குச் சொந்தமானது. அதற்கான உரிமை உனக்கு உண்டு. ஆனால், "நீ நன்றாக உண்டு; தேக, மன அரோக்கியமாக இருந்து அந்த வலிகள் இல்லாமல் அந்த உழைப்பினைச் செய்திருக்க முடியும்” என்று கூறி முடித்துக் கொண்டேன்.

No comments:
Post a Comment