"நான் யாதுமாகி நிற்கிறேன்.
கிருஷ்ணர் என்ற ஒரு பொருள் நிலையானது அல்ல.
இவ்வுலகில் அதர்மங்கள் தலை தூக்கும்போது மாயையினை உடலாகத் தரித்து அவதரிக்கிறேன்.
யார் என்னை எவ்வடிவில் ஆராதித்தாலும் அவருக்கு அவ்வடிவில் அருள் புரிகின்றேன்.
சூரியனை வழிபடுபவர்கள் சூரியனை அடைகிறார்கள்.
சந்திரனை வழிபடுபவர்கள் சந்திரனை அடைகிறார்கள்.
சிறிய தேவதைகளை ஆராதிப்பவன் சிறிய தேவதைகளை அடைகிறார்கள்.
பிதிர்களை ஆராதிப்பவன் சிறிய பிதிர்களை அடைகிறார்கள்.
பித்துருக்களை வழிபடுபவர்கள் பித்துருக்களை அடைகிறார்கள்.
என்னை வழிபடுபவர்கள் என்னையே அடைகிறார்கள்."
n ஐ ஆராதிப்பவன் n ஐயே அடைகிறான்.
வாழ்க்கையில் தொடர்ச்சியான கடும் உழைப்பு இருந்தும் சிலர் வெற்றியடையாமல் போவது ஏன்? மேலே கிருஷ்ணர் கூறியதன்படி ஒருவர் தான் வழிபடுவதையே அடைகின்றார். சிலர் மட்டுமே சிந்தித்து செயலாறுகின்றனர். ஏனையோர் தாம் கொண்ட பழக்கத்திபாலோ அல்லது எழுந்தமானமாக வேலையின் போக்கிலோ வேலை செய்கின்றனர். அவர்கள் கண்ணும் கருத்தும் (வழிபாடு) அவர்களின் வேலையினைச் செய்து முடிப்பதிலேயே இருக்கிறது. பழக்கத்தில் செய்பவர்கள் அதே விளைவையே மீண்டும் மீண்டும் அடைகின்றனர். எழுந்தமானமாகச் செய்பவர்கள் எழுந்தமானமான விளைவுகளை, அதாவது திட்டமாகக் கூற முடியாத விளைவுகளை அடைகின்றனர். ஆனால் எப்போதும் வேண்டிய விளைவை அடைய முடிவதில்லை.
சிலர் வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருப்பர். ஆனால் முன்னேற்றம் அடைவதில்லை. ஆனால் அவர்கள் எதை நோக்கி ஓடுகிறார்களோ அதை நிச்சயம் அடைகின்றனர். அதில் மாற்றமில்லை. அதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தமது வேலைகளை, சிறிதும் மாற்றாது அதே போக்கின் செய்கின்றனர். பிறகு மாற்றம் இன்றி ஏற்றம் எப்படி வரும்? நமது செயல்பாடுகளில் மாற்றத்தினையும் ஏற்றத்தையும் கொடுக்க வல்லது நமது சிந்தை மட்டுமே ஆகும். அதனைச் சிறிதும் கூட அவர்கள் வழிபடுபது கிடையாது. அதன் மீது அவர்கள் கவனம் திரும்புவது கிடையாது. பிறகு முன்னேற்றம் எப்படி இருக்கும்?
ஆங்கிலத்தில் hard work, smart work என்று இரண்டு பதங்கள் உண்டு. எந்நேரமும் அலுவலுடன் இருத்தல் நமக்கு எப்போதும் நன்மையானது என்று பொருள் படாது. ஆனால், அந்த அலுவலின் பயனை அவ்வாறே நமக்கு ஈட்டித் தரும். நாம் வெறுமனே நமது கடமைகளைச் செய்து முடிப்பதில் கவனமாக இருக்காமல் சிந்தித்துச் செயல்பட்டால் அனைத்தும் நமது கைவசமாகும். இதற்கு நாம் நமது ஓட்டத்தை நிறுத்தி நமது சிந்தனைக்கு நேரம் ஒதுக்கி வழிபட வேண்டும். அது நமக்கு வேண்டிய மாற்றங்களையும் ஏற்றங்களையும் பெற்றுத் தரும். ஞானத்தின் வலிமை பற்றி பிறிதொரு பதிவில் பார்த்திருந்தோம். ஞானத்தினால் அடைய முடியாதது என்று எதுவும் இல்லை. இதனை உணர்ந்து கொண்டால் வாழ்வு வளமாகும். நாளை நமதாகும்.
நமது வாழ்க்கை நில்லாமல் ஓடிக் கொண்டேதான் இருக்கும். அதன் பின்னே ஓடிக்கொண்டு இருந்தால் நமது வாழ்க்கையையே இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதைக் கூட நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது. உடல் உழைப்பால் வேலை செய்யும் தொழிலாளிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தினமும் தமது வேலைகளை மாடுபோல் செய்வதிலேயே கவனம் செலுத்திகிறார்கள். அவர்கள் சற்று சிந்தித்திருந்தால் அதனையே எளிமையாகச் செய்யும் முறை ஒன்றினைக் கண்டுபிடித்திருப்பார். வீட்டுப் பெண்களை எடுத்துக் கொண்டால், அனேகர் காலை எழுந்தவுடன் இயந்திரம் போல அன்றாடம் செய்யும் வேலைகளைச் செய்கின்றனர். அவற்றில் எந்த மாற்றமும் கிடையாது. இதனால் அவர்களால் வீட்டினைச் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியாமல் போகிறது. வாழ்க்கையும் தினமும் ஒரே மாதிரி அமைவதால் வாழ்க்கையும் சலித்துப் போகிறது.
நாம் செய்யும் காரியங்கள் மேன்மையுற வேண்டின் நமது சிந்தனைக்கு நேரம் ஒதுக்குதல் அவசியமாகும்.


No comments:
Post a Comment