விரதத்தினை நோன்பு, தவம் என்றும் அழைப்பர். ஆறுமுகநாவலர் விரத்ததினை பின்வருமாறு வரவிலக்கணப் படுத்துகிறார்.
“மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு, உணவை விடுத்தேனுஞ் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு விதிப்படி வழிபடுதல் விரதமாகும்”
விரதத்தின்போது காலையில் குளித்து, சூரிய நமஷ்காரம் செய்து, ஒரு வேளைக்கான அல்லது முழு நாளுக்குமான உணவை விடுப்பர். உண்மையில் குளித்தலுக்கும் உணவுக்கும் விரததிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாதவர், தனது சிந்தையை ஒருமுகப்படுத்தத் தெரியாதவர் மட்டுமே விரதம் பிடிக்க வேண்டியவராவார். ஒருவர் உணவைத் தவிர்த்து இறைவனையே மனதில் நினைக்கும்போது, அவரை அறிந்தோ அறியாமலோ அவரது உடலிலுள்ள அனைத்துக் கலங்களும், ஏனைய சிந்தனைச் சிதறல்களினின்று நீங்கி, அவரது சிந்தை பசியினை நினைத்து, பசியிலேயே குவிகிறது. அவரது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் கூட அவரது பேச்சைக் கேட்க ஆரம்பிக்கின்றன. அப்போது அவர்தம் ஊனும் உடலும் உயிரும் ஒன்றிக்கின்றன. அப்போது அவரது சிந்தை ஒருங்குகிறது; ஞானம் வளர்கிறது. ஞானம் இருந்தால் வேறு என்ன வேண்டும். அவரைத் தானாகவே வெற்றிகள் தேடி வரும். அதாவது அவர் தனது காரியங்கள் யாவற்றையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறார்; வெற்றி பெற்றவராகிறார்.
விரதம் என்றால் மனம் ஒரே எண்ணத்திலிருக்க, வாக்கு என்றும் இறையைத் துதித்து இருக்க, காயம் என்ற மெய்யுருகி வழிபாட்டில் ஈடுபடுதல் ஆகும். அப்போது அவ் எண்ணம் நிறைவேற நாமும் நம்மைச் சூழவும் சக்திகள் துணை நிற்கின்றன. ஏன் விரதத்தின்போது உணவைத் தவிர்க்கிறோம். உண்டு திடமாக உள்ளபோது கருணை, பக்தி ஏற்படாது; மனமுருக முடியாது. மனமுருகாமல் வரமில்லை.
இதையும் கொள்க. திருமூலர் திருமந்திரத்தில் உபாயம் அறிந்து உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றார். உடல் இல்லாமல் உயிர் இங்கு நிலையாது. உயிர் எப்படி உடலுடன் உறைகிறது? அந்த உயிர்த் தீயைத் தூண்டி பிரகாசமடையச் செய்ய விரதம் பிடித்தலும் ஒரு உபாயம் ஆகும். சக்தியானது வாயு, திரவம், திண்மம் என்றவாறு அது அமைகிறது. உயிரை வளர்க்க அவை சந்திக்கும் உடலில் உள்ள சக்கரங்களை தூண்டுதலே தியான அனுட்டானங்கள் ஆகும்.
ஆனால், அனுதினமும் உணவைத் துறந்து விரதம் பிடித்தால் அது வீணே உடலை வருந்தும் காரியமாக அமையுமே அன்றி நன்மை கிட்டாது. நமது உடல் அதற்கு பழக்கப்பட்டுவிடும். வாரத்தில் ஒரு நாள், ஒரு வேளை உணவைத் தவிர்த்து விரதம் பிடித்தல் நமது வாழ்வை மேம்படுத்தலாம். ஆனால், முழுமையான எண்ணங்கள் உடையவரும், மனதை ஒருமுகப்படுத்தி முழுமையாகத் தன்னை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையவரும் விரதம் நோற்க வேண்டிய அவசியம் இல்லை என்பது என்னுடைய கருத்து. அதோடு, தன் கடமைகளைச் சரிவரச் செய்பவர்களிற்கு அவர்தம் வினைப் பயனினாலேயே உடல் மெலிந்து உயிர் கூடுகிறது. அதற்கு மேல் அவர் உணவு விடுத்து விரதம் கைக்கொள்ளுதலும் வேண்டுமோ!

No comments:
Post a Comment