ஒரு சில இனங்கள் மட்டுமே பின்பற்றும் விநோதமான திருமணக் கலாச்சாரம்தான் இந்தச் சீதனம். ஒரு ஆணிற்கு, ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும்போது, மாப்பிள்ளை வீட்டார் வேண்டும் பெறுமதியைப் பெண் வீட்டார் பணமாகவோ, நகைகளாகவோ, சொத்துக்களாகவோ திருமண தினத்தன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ கொடுத்தாக வேண்டும். சில திருமணங்களின்போது திருமணத்தின் பின்பும் சீதனம் செலுத்த அனுமதிக்கப்படும். அதற்காகக் குறித்த காலம் வாய்தாவாக வழங்கப்படும். அதற்குள் பேசிய சீதனம் செலுத்தப்படாமல் திருமண பந்தம் முறிந்து போன சந்தர்ப்பங்களும் உண்டு. வெளிச் சமூகப் பார்வையில் இதனால் ஒரு ஆண் (மணமகன்) நன்மை அடைவது போலத் தோன்றும். அது எப்போதும் உண்மை அல்ல. குடும்பக் கட்டமைப்பின் உள்ளே பார்க்கும்போது இதனால் அதிக நஷ்டம் அடைவதும் மன உளைச்சலுக்கு உள்ளாவதும் ஆண்களே. ஆனால் கொடி பிடிப்பது என்னமோ பெண்கள் தான்.
ஒரு குடும்பத்தினுள்ளே, அதுவரை அக்குடும்பத் தேவைகளை எல்லாம் கட்டிச் சேர்த்த சொத்துகள் யாவும் பெண்களுக்கு சீதனமாகவும், அப்போதும் அதற்கு முன்பும் ஏற்பட்ட பொறுப்புக்கள் (கடன்கள்) எல்லாம் ஆண்களுக்கும் வழங்கப்படுகிறது. நன்றாகக் கவனியுங்கள் சொத்துக்கள் பெண்களுக்கு; பொறுப்புக்கள் ஆண்களுக்கு. இது மட்டுமல்ல, இப்போதெல்லாம் பெண்கள் தமக்கு சமவுரிமை வேண்டும் எனக்கோரி, கல்வி கற்கின்றனர். அது தவறல்ல. அப்போது அவர்கள் சீவிச் சிங்காரித்துக் கல்லூரிக்குச் செல்லும் செலவுகள் மேலதிகம். இது போகக் கல்வி கற்ற பெண்ணிற்கு கற்ற மாப்பிள்ளையையே திருமணம் செய்து கொடுக்க வேண்டும். அப்போது அவர்களுக்கு வழங்க வேண்டிய சீதனப் பெறுமதியும் அதிகமாக இருக்கும். ஏனெனில் மாப்பிள்ளை வீட்டார், மாப்பிள்ளையின் படிப்புச் செலவை திருப்பி எடுக்க வேண்டுமாம். என்ன செய்ய அவனும் இதனால் பாதிக்கபட்டு இருக்கக்கூடும். ஆண் பெண் இருபாலாரும் வாழும் வீடுகளிலே, அப் பெண்களிற்குச் சீதனம் கொடுப்பதற்காக பல தேவைகள் நிறைவேற்றப்படாமல் சொத்துக்கள் சேர்க்கப்படும். இதனால் வஞ்சிக்கப்படப் போவது ஆண்மகன்களும் தான். அது மட்டுமல்ல ஆண்மகன்கள் ஓரளவு வளர்ந்து விட்ட பின்னே, பெற்றோர்கள் ஆரம்பித்து விடுவார்கள். நீதான் உன் சகோதரிகளுக்குச் சீதனம் கொடுத்தாக வேண்டும் என்று. இதனால் ஆண்மகன்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றார்கள்.
எங்கள் வீட்டில் அம்மாவின் ராஜ்ஜியம் தான். அதனால் பெண்கள் கேட்கும் சகல சமவுரிமைகளும் பெற்றுக் கொடுக்கப்படும். நான் அதனை வரவேற்கிறேன். எங்கள் வீட்டில் ஆணையும் பெண்ணையும் வேறுபடுத்தி எதுவும் வழங்கப்படுவது கிடையாது. அனைவருக்கும் எல்லாம் சமமாக, தேவையானபோது வழங்கப்படும். அனைவருக்கும் சம சுதந்திரம் கிடைப்பதால் என் பேச்சை என் இளைய சகோதரிகள் கூடக் கேட்க மாட்டார்கள். தனக்குத் தான் வைத்தது தான் சட்டம் என்று சண்டை செய்வார்கள். நான் எனக்காக எதுவும் செய்யுமாறு கேட்பதில்லை; எவரையும் கேட்டது மிக மிக அரிது. அவர்களின் நன்மைக்காக ஏதாவது அறிவுரை சொன்னாலும் அதனை ஏற்றுக் கொண்டு நடக்க மாட்டார்கள். ஆனால் இதுவும் உண்மை, அவர்கள் என்னிடம் உதவி என்று பெரிதாக எதுவும் கேட்டதுமில்லை. இது அந்தச் சமவுரிமை கொடுத்த திமிராகக் கூட இருக்கலாம். நான் அம்மாவிடம் கேட்டேன்; அனைவருக்கும் சமவுரிமை. வெறுமனே ஆணாகப் பிறந்த குற்றத்திற்காக, நான் ஏன் என் சகோதரிகளுக்குச் சீதனம் தர வேண்டும் என்று. அவர் சொன்னார்; நீ சீதனம் தர வேண்டாம். உன்னைப் படிப்பித்த செலவைத் தா. நான் என் மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று. பிறகு என்ன, சொத்துக்கள் பெண்களுக்கு; பொறுப்புக்கள் ஆண்களுக்கு. அதோடு இந்த சமூகத்தில் அப்படித்தான் கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் சொன்னார். I do not care about this bloody society. எங்கள் வீட்டில் எல்லாம் இந்தச் சமூகத்தில் உள்ளது போலவா கடைப் பிடிக்கப்படுகிறது.
ஆக வெறுமனே ஆணாகப் பிறந்த ஒரு குற்றத்திற்காக ஒரு ஆண்மகன் தன் பல கனவுகளைப் புதைத்துத் தன் சகோதரிகளிற்குச் சொத்துச் சேர்க்க ஒத்துளைக்க வேண்டும். அது போதாமல் போனால் அவனும் உழைத்தோ கடன்கள் வாங்கியோ தனது சகோதரிகளிற்குச் சீதனம் கொடுத்துக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும். இதிலும் ஒரு ஆண்மகனும் பல பெண்மகள்களும் உள்ள வீடுகளில் நிலைமை கவலைக்கிடம். அதுவரை தந்தை சேர்த்த சொத்துக்களும் சகோதரிகளுக்கு, ஆண்மகன்கள் உழைப்பும் சகோதரிகளிற்கு அதில் எஞ்சிய கடன் மட்டுமே ஆண்மகன்களுக்கு. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் மேலே குறிப்பிட்ட தந்தையும் இது போன்ற சூழலில் பாதிக்கப்பட்ட ஒருவராகத்தான் இருந்திருப்பார். #அவரும் ஒரு ஆண்தானே. இவை யாவும் தாண்டி ஒரு ஆண்மகன் திருமணம் செய்யும்போது அவனுக்குச் சீதனம் கொடுத்தால் தான் என்ன கொடுக்கவில்லை என்றால் தான் என்ன.
எப்போதும் சமவுரிமை வேண்டும் என்று கேட்கும் பெண்களே இதில் எங்கே வாழ்கிறது சமவுரிமை. ஒரு வீட்டில் இருந்து ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணிற்கும் சமமாகத்தான் அனைத்தும் வழங்கப்படுகிறதா?
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா! நீ கண்ணை மூடித் தூங்கிடடா!

No comments:
Post a Comment